உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த எதிர்கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால், தாங்களும் அவர்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூரில் நேற்று (டிச.8) செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் என்ன சொல்லியிருக்கிறது? 9 புதிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் முறையாக இடஒதுக்கீடு மற்றும் தொகுதி வரையறைகளை மேற்கொண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. ஆனால், 9 மாவட்டங்கள் என்பது கிட்டத்தட்ட 25%. இத்தனை மாவட்டங்களை ஒதுக்கிவிட்டு இடஒதுக்கீட்டை எப்படி முறையாக மேற்கொள்ள முடியும் என நினைக்கிறீர்கள்?
அதனால், தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை வேறு வழியில்லாமல் நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தலை நியாயமாக நடத்த எதிர்கட்சிகள் நீதிமன்றத்தை நாடினால், நாங்களும் அவர்களுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம்" என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.