கோப்புப்படம் 
தமிழகம்

வெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காய் விலையும் கடும் உயர்வு: கோயம்பேடு சந்தையில் கிலோ ரூ.380-க்கு விற்பனை

செய்திப்பிரிவு

கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தை தொடர்ந்து முருங்கைக்காயின் விலையும் உயர்ந்துள்ளது. நேற்று முருங்கைக்காய் கிலோ ரூ.380-க்கு விற்கப்பட்டது.

கடந்த இரு மாதங்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதைத் தடுக்க அரசு சார்பில் நியாய விலைக் கடைகள் மற்றும் பண்ணை பசுமை கடைகளில் வெங்காயத்தை விற்க நடவடிக்கை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை உயர்ந்திருப்பதால், வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நடவடிக்கையிலும் மத்திய அரசு இறங்கியுள்ளது. இருப்பினும், கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.160 வரை விற்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் கோயம்பேடு சந்தையில் வெங்காயம் விலை உயர்வைத் தொடர்ந்து, முருங்கைக்காயின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி முருங்கைக்காய் கிலோ ரூ.380-க்கு விற்கப்பட்டது. இதனால் பல ஹோட்டல்களில் முருங்கைக்காய் சாம்பார் வழங்குவது குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் மற்ற காய்கறிகளான தக்காளி, கத்தரிக்காய் தலா ரூ.30, வெங்காயம், சாம்பார் வெங்காயம் ரூ.160, உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய் தலா ரூ.27, அவரைக்காய், பீட்ரூட் தலா ரூ.35, வெண்டைக்காய், கேரட் தலா ரூ.40, முள்ளங்கி ரூ.20, பாகற்காய், புடலங்காய் தலா ரூ.25, பீன்ஸ் ரூ.45, முட்டைக்கோஸ் ரூ.14 என விற்கப்பட்டு வருகிறது.

ஜாம்பஜார் போன்ற சில்லறை விற்பனை காய்கறி சந்தையில் உள்ள கடைகளில் குறைந்த அளவே விற்கப்படுகிறது. பல கடைகளில் முருங்கைக்காய் விற்கப்படவில்லை. அது தொடர்பாக அந்த சந்தை வியாபாரிகளிடம் கேட்டபோது, ‘‘கோயம்பேடு சந்தையில் இருந்து வாங்கி வந்து கிலோ ரூ.450-க்கு விற்க வேண்டும். விலை அதிகமாக இருப்பதால் அதை யாரும் வாங்குவதில்லை. அதனால் முருங்கைக்காய் விற்பதை தவிர்த்து வருகிறோம்’’ என்றனர்.

சென்னை ஹோட்டல் நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ‘‘முருங்கைக்காய் விலை உயர்வால், முருங்கைக்காய் சாம்பார் வைப்பதற்கு பதிலாக கத்தரிக்காய், கேரட் போன்ற காய்கறிகளைக் கொண்ட சாம்பார்களை தயாரித்து வழங்கி வருகிறோம்’’என்றனர்.

முருங்கைக்காய் விலை உயர்வு தொடர்பாக கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூறும்போது, ‘‘திண்டுக்கல் தேனி போன்ற மாவட்டங்களில் இருந்து முருங்கைக்காய் வருகிறது. கடந்த 1 மாதமாக வரத்து குறைந்ததாதல், அதன் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிக மானதுதான்" என்றார்.

SCROLL FOR NEXT