கோப்புப்படம் 
தமிழகம்

பெண் மருத்துவர் எரித்து கொலை எதிரொலி; பிளாஸ்டிக் பாட்டில்களில் இனி பெட்ரோல் விநியோகம் இல்லை: விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக, தமிழகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் இனி வழங்கப்பட மாட்டாது என பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பி.முரளி கூறியதாவது: தெலங்கானா மாநிலத்தில் அண்மையில் பெண் கால்நடை மருத்துவர் சமூகவிரோதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, சிலரால் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்லப்பட்டார்.

இதுதொடர்பான விசாரணையில், அந்த நபர்கள் அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் இருந்து பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் வாங்கியுள்ளனர். அவர்களுக்கு பெட்ரோல் வழங்கியதற்காக, அந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய காவல்துறையினர் முயற்சி மேற்கொண்டனர்.

தமிழகத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்து, அதற்கு ஏதாவது ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில், இனிமேல் பெட்ரோல் பங்க்குகளில் பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பெட்ரோலியம் மற்றும் வெடிப்பொருட்கள் பாதுகாப்பு விதிப்படி, வாகனங்களுக்கு நேரடியாகவும் அல்லது 200 லிட்டர் கன்டெய்னர்களில் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. எனினும், இனிமேல் குறைந்தது 5 லிட்டர் கேன்களில் மட்டுமே பெட்ரோல் வழங்கப்படும்.

அவ்வாறு வழங்கும்போது, பொதுமக்கள் தங்களது அடையாள அட்டையின் நகலை பெட்ரோல் பங்க் ஊழியரிடம் அளிக்க வேண்டும். அவ்வாறு அளிக்கவில்லை என்றால் அவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது. இதுதொடர்பாக, அனைத்து பெட்ரோல் பங்க்குகளிலும் அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது என்றார்.

SCROLL FOR NEXT