திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரிந்த 83 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து, கோசாலையில் ஒப்படைத்தனர்.
திருநெல்வேலி மாநகர் பகுதிகளில் ஏராளமான மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. கனரக வாகனங்கள் மோதி கால்நடைகளும் விபத்தில் சிக்கி காயமடையும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
அதன்படி, மாநகராட்சி ஊழியர்கள் அவ்வப்போது கால்நடைகளை பிடித்து, கோசாலையில் ஒப்படைக்கின்றனர். சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து, மாடுகள் திரும்ப ஒப்படைக்கப்படுகின்றன. இருப்பினும் மாடுகள் தொல்லைக்கு தீர்வு ஏற்படவில்லை. இதைக் கண்டித்து, நேற்று மேலப்பாளையத்தில் சாலையில் திரியும் மாடுகளை சாலையில் கட்டிப் போடும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உத்தரவின்பேரில், மாநகர நல அலுவலர் சதீஷ்குமார் மேற்பார்வையில் இன்று சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர். சுகாதார அலுவலர்கள் சாகுல்அமீது, அரசகுமார், முருகேசன் மற்றும் ஊழியர்கள் 6 குழுக்களாகச் சென்று, மாடுகளை பிடித்தனர்.
மேலப்பாளையம் அம்பாசமுத்திரம் சாலை, ஆசாத் ரோடு, நேருஜி சாலை, நேதாஜி சாலை, அண்ணா வீதி, தெற்கு புறவழிச் சாலை, திருவனந்தபுரம் சாலை, கொக்கிரகுளம் சாலை, புதிய பேருந்து நிலைய பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 83 மாடுகள் பிடிக்கப்பட்டன.
பின்னர், அந்த மாடுகளை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோயில் கோசாலையில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “திருநெல்வேலி மாநகர பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிந்த 200-க்கும் மேற்பட்ட மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்தி, மாடுகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.
மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் அதிகாரிகளின் பரிந்துரையின்பேரில், நலிவுற்ற நிலையில் உள்ள சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்காக 8 மாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாடுகளை பிடிக்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்படும்” என்றனர். சாலைகளில் மாடுகளை திரிந்தால் சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினரும் எச்சரித்துள்ளனர்.