விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள திருவக்கரையின் கல்மரங்கள் செம்மண் குவாரிகள் மூலம் சுரண்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை ஓரங்களில் கொட்டப்படுகின்றன. இதை தடுத்து பாதுகாத்திட கோரி நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவம் ஆட்சியருக்கு புகார் மனு அனுப்பியது.
இதுதொடர்பாக நேற்று 'இந்து தமிழ்' நாளிதழ் செய்தி வெளியிட்டது. புவியியல் சார் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று விழுப்புரம் மாவட்டம் திருவக்கரையில் உள்ள கல் மரங்கள்.
திருவக்கரை பகுதி முன்பு பெரும் நீர்நிலையாய் இருந்துள்ளது. அதையொட்டி இருந்த நிலப்பகுதிகளில் பெருங்காடுகள் இருந்தன. அக்காடுகளில் கனி தரும் மரங்களும் கனி தரா வகை மரங்களும் இருந்தன. இப்பெரு மரங்களை அடித்துக் கொண்டு வரும் அளவிற்கு வெள்ளப் பெருக்கு அக்காலத்தில் ஏற்பட்டு இருக்கிறது. அப்படி அடித்துவரப்பட்ட மரங்கள் நீர்நிலைகளின் அடியில் படர்ந்து விட்டன. தொடர்ந்து ஆறுகளில் அடித்து வரப்பட்ட கூழாங்கற்கள் மணல் களிமண் போன்ற படிமங்களில் இருந்து இந்த மரங்கள் புதையுண்டு போயின.
புதையுண்ட மரங்கள் சிதைவுறத் தொடங்கும் போது செல் சுவர்களுக்கிடையே (CELL WALL) உள்ள மரப் பொருள் அகற்றப்பட்டு, அந்த இடங்களை சிலிக்கா ஆக்கிரமித்துக் கொண்டது. இந்த இடமாற்றப் பணி (REPLACEMENT) சிறிது சிறிதாகத் தொடங்கி பின் முழுமை அடைந்தது. இதனைப் பாறையாதல் அல்லது படிவமாதல் (PETRIFICATION) என்கிறோம். மரம் முழுமையாக பாறையானப் பின்னும் செல் அமைப்புகளில் மாற்றங்கள் ஏற்படாததால் அவை மரம் போன்றே காட்சி தருகின்றன. இதை கல் மரங்கள் என்கிறோம் என்று இதற்கான அறிவியல் சார் விளக்கம் நீண்டகாலமாக தரப்படுகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல் மரங்களின் சில பகுதிகள் எடுக்கப்பட்டு புதுச்சேரி தாவிரவியல் பூங்கா, சென்னை எழும்பூர் அருங்காட்சியகம், உதகை தாவரவியல் பூங்கா, சாத்தனூர் தேசிய கல்மரப் பூங்கா, கேரளா திருவனந்தபுரம் அருங்காட்சியகம் ஆகிய இடங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய அரிய கல்மரங்கள் தற்போது, செம்மண் குவாரிகள் மூலம் சுரண்டப்பட்டு தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதை ஓரங்களில் கொட்டப்படுவதாக புகார்கள் வந்திருக்கின்றன.
கனிமவளக் கொள்ளை:
இதுகுறித்து ஏற்கெனவே ஆட்சியரிடம் புகார் மனு அளித்த நடுநாட்டு வரலாறு பண்பாட்டு ஆய்வு நடுவத்தின் ஒருங்கிணைப்பாளர் எழுத்தாளர் செங்குட்டுவனிடம் கேட்டபோது, ''திருவக்கரைப் பகுதியில் அனுமதி பெறப்பட்டும் அனுமதி பெறாமலும் செம்மண் குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து ஆயிரக்கணக்கான லோடுகளாக செம்மண்ணும் அதனூடாகக் கல் மரங்களும் வெட்டி எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலை தொடர்ந்தால் இரண்டு கோடி ஆண்டுகளாக இருந்து வரும் கல் மரங்கள் அடங்கிய செம்மண் பூமி நம் கண் எதிரிலேயே காணாமல் போய்விடும். கல் மரங்கள் காணப்படுவதாக அறியப்பட்டுள்ள 247 ஏக்கர் நிலப்பரப்பையும் அரசு கையகப்படுத்த வேண்டும். திருவக்கரைப் பகுதியில் செம்மண் எடுப்பதை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும். கனிமவளக் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட கனிமவளத்துறை அலுவலகத்தில் கேட்டபோது, "வானூர் அருகே திருவக்கரை, புத்துரை, பெரம்பை ஆகிய கிராமங்களில் செம்மண் குவாரி அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடவம்பட்டு, கொண்டலாங்குப்பம், தொள்ளாமூர், சேராப்பட்டு உள்ளிட்ட 8 கிராமங்களில் செம்மண் குவாரிகள் இயங்கி வருகின்றன.
இங்கு கிடைக்கும் கல் மரங்களை திருவக்கரையில் உள்ள கல்மரப் பூங்கா அருகே கொட்டுமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை பாதுகாக்க காவலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்'' என்று தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, "'நம் அலுவலகத்தில் கல் மரம் ஒன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் விழுப்புரத்தில் கல்மரப் பூங்கா அமைக்கப்படும். அப்பகுதியில் செம்மண் குவாரிக்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து கனிமவளத் துறையினரிடம் கலந்தாலோசிக்கப்படும்'' என்றார்.