தமிழகம்

ஊதிய உயர்வு பிரச்சினை: என்.எல்.சி. தொழிற்சங்க நிர்வாகிகள் கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு

செய்திப்பிரிவு

என்.எல்.சி. ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை நிறைவேற்ற அந்நிறுவனத்தின் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் நேற்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினர்.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த மாதம் 20-ம் தேதி முதல் என்.எல்.சி. ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்போராட்டத்துக்கு அரசியல் கட்சிகளின் ஆதரவைக் கோருவதற்காக என்.எல்.சி. நிறுவனத்தின் அனைத்துக் கட்சி தொழிற்சங்க நிர்வாகிகள் நேற்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து பேசினர்.

தொழிற்சங்க நிர்வாகிகள் குழுவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் திருமாவளவன், பொதுச்செயலாளர் ராசவன்னியன், அண்ணா தொழிற்சங்கத்தின் தலைவர் இராம. உதயக்குமார், சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் வேல்முருகன், பாமக தொழிற்சங்க நிர்வாகி திலகர் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றிருந்தனர்.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 20 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருவதையும், தங்களின் கோரிக்கைகளை ஏற்க என்.எல்.சி. நிர்வாகம் மறுத்து வருவதையும் ராமதாசிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் எடுத்துக் கூறினர். தங்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்ட னர்.

இதேபோல், நேற்று மாலை சென்னையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து ஆதரவு கோரினர். அப்போது மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்து பேசி இன்னும் இரண்டு நாட்களில் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் உறுதியளித்தார்.

மேலும், இன்று திமுக தலைவர் கருணாநிதியையும் தொழிற் சங்க நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு கோர முடிவு செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT