இரா.கார்த்திகேயன்
என்கவுன்ட்டர் சரி தப்பு என வாதம் எழுந்துள்ள நிலையில் திருப்பூர் ஆட்சியராக உள்ள ஐஏஎஸ் அதிகாரி அதை ஆதரித்து ட்விட்டரில் ரஜினி பாடல் வரிகளைப்போட்டு ஆதரித்துள்ளது, நெட்டிசன்களிடையே விவாதத்தை தூண்டியுள்ளது.
டிவிட்டர் உட்பட சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக இருப்பவர் திருப்பூர் ஆட்சியர் க. விஜயகார்த்திகேயன். இவர் கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூர் ஆட்சியராக பதவியேற்றார். அப்போது கோவையில் இருந்து திருப்பூர் வரும் வழியில் வாகனத்தில் செல்பி வீடியோ எடுத்து, ’திருப்பூர் ஆட்சியராக பதவி ஏற்க இருக்கிறேன்’ என பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
பதவியேற்புக்கு முதல்நாள் இரவில் திருப்பூர் கடைத்தெருவுக்குச் சென்று, தன்னை ஆட்சியர் என அறிமுகப்படுத்திக்கொண்டு திருப்பூரின் நிலையை அங்கிருந்து மக்களிடம் பேசியது அனைத்தும் சமூகவலைதளங்களில் வைரலானது. இவரது வீடியோக்கள் திருப்பூர் மாநகர மக்கள் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் பேசுபொருளானது.
இவரது டிவிட்டர் கணக்கில், தினமும் பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்கிறார்கள். அதற்கு அவர் பதில் தருவதுடன், சம்பந்தப்பட்ட மனுவை துறை அலுவலர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க வைக்கிறார்.
இந்நிலையில், தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை நேற்று அதிகாலை தெலங்கானா போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதை பொதுமக்கள் வரவேற்பதுபோன்று திருப்பூர் ஆட்சியர் விஜயகார்த்திகேயனும் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்ச்சிப்பொங்க வரவேற்று பதிவிட்டுள்ளார்.
“ச்சும்மா கிழி” என்றும் ஹைதராபாத் போலீஸூக்கு மரியாதை தெரிவித்தும், டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்தப்பதிவு அவரது கணக்கை பின் தொடரும் பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. மாவட்ட ஆட்சியர், ஆட்சிப்பணி அதிகாரி போலீஸ் என்கவுன்ட்டர் குறித்து பல மாறுபட்ட கருத்துகள் உள்ளபோது அதில் ஆட்சியராக கடந்துச் செல்லாமல் சராசரி மனிதர்போல் பதிவிடுவது, அவரை பின்பற்றும் பலருக்கும் தவறான முன்னுதாரணத்தை அளிக்கிறாரே என சங்கடப்பட்ட சிலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டு அவரிடமே கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதில் ஒருவர், ”சார், இதுபோன்ற விஷயங்களை ஊக்கப்படுத்த வேண்டாம். வெகுஜன மக்கள் இதனை வரவேற்கலாம். ஆனால் உங்களைப் போன்ற உயர் அலுவலர்கள் இதுபோன்ற கருத்தை பதிவிட்டிருக்க வேண்டாம்” என்ற தொனியில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதிலளித்த ஆட்சியர் விஜயகார்த்திகேயன், “இது என் தனிப்பட்ட கருத்து தான்” என பதில் அளித்திருந்தார்.
அதேபோல் மற்றொருவர், நீங்கள் என்கவுன்ட்டரை ஆதரிக்கிறீர்களா? என கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த ஆட்சியர், “தனிப்பட்ட முறையில் இந்த வழக்கில் ஓ.கே சொல்வேன். அவர்கள் தப்பிக்கும்போதுதான் போலீஸார் என்கவுன்ட்டர் நிகழ்த்தி உள்ளனர்” என பதில் ட்விட் போட்டுள்ளார்.
போலீஸாரை வாழ்த்துவதற்கு ரஜினி நடித்து வெளிவர உள்ள ’தர்பார்’ படத்தின், பாடலான “ச்சும்மா கிழி” என்பதை தெலங்கானா என்கவுன்ட்டர் சம்பவத்துக்கு போட்டு அதை சமூகவலைதளத்தில், ஒரு மாவட்டத்தின் ஆட்சியர் பதிவிட்டு பேசுபொருள் ஆக்கியிருப்பது பலரையும் பரபரப்பில் ஆழ்த்திஉள்ளது.