தமிழகம்

குற்றால அருவிகளில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்: அலைமோதும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம்

செய்திப்பிரிவு

குற்றாலம் அருவிகளில் தொடர்ந்து 6 மாதங்களாக தண்ணீர் கொட்டுகிறது. விடுமுறை தினமான இன்று ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் இந்த ஆண்டில் சாரல் சீசன் சற்று தாமதமாகத் தொடங்கியது. கடந்த ஜூன் மாதம் 10-ம் தேதி அருவிகளில் நீர் வரத்து ஏற்பட்டது. ஆரம்பத்தில் சாரல் மழை போதிய அளவில் பெய்யாவிட்டாலும், ஜூலை மாதத்தில் இருந்து சாரல் மழை களைகட்டியது.

பழைய குற்றாலம் அருவியில் ஒரு நாள் மட்டும் நீர் வரத்தின்றி முற்றிலும் வறண்டு காணப்பட்டது. மற்ற அருவிகளில் தொடர்ந்து நீர் வரத்து இருந்தது.

தென்மேற்கு பருவமழைக் காலம் முடிந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த 6 மாதங்களாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.

இந்நிலையில், விடுமுறை தினமான இன்று குற்றாலம் பிரதான அருவிகளில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. பெண்கள் குளிக்கும் பகுதியில் குறைவான கூட்டமே இருந்தது. ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் கூட்டம் குறைவாக இருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள், கோயிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வரும் பக்தர்கள் வழியில் குற்றாலம் அருவிகளில் குளித்துவிட்டு செல்வார்கள். அவர்கள் பெரும்பாலும் குற்றாலம் பிரதான அருவிக்கே வருகிறார்கள். எனவே, குற்றாலம் பிரதான அருவியில் மட்டும் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

SCROLL FOR NEXT