ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும் அவரது மனைவி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யுமாறு நளினி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இதுதொடர்பாக ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், சமீபத்தில், தன் மகளின் திருமணத்திற்காக ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார். பரோல் முடிந்ததையடுத்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட அவர், தன்னை கருணைக் கொலை செய்யக் கோரி கடந்த சில தினங்களுக்கு முன் நளினி மனு அளித்திருந்தார். மேலும், தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் எனவும் நளினி வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ம் தேதி முதல் நளினி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக, அவரது உடல்நிலை மோசமான நிலையில், 10-ம் நாளான இன்று (டிச.7) நளினி உண்ணாவிரதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றார்.
தன் கணவர் முருகன் கேட்டுக்கொண்டதையடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொள்வதாக நளினி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.