தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகளில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இந்த ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று (சனிக்கிழமை) அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் குடிமராமத்து பணிகளில் பெரிய ஊழல் நடந்து வருகிறது. எந்த மாவட்டத்தில் எந்த அமைச்சர் எந்த ஒப்பந்ததாருக்குப் பணி வழங்கியுள்ளார் என்பது குறித்தும் இப்பணியில் நடந்து வரும் மிகப்பெரிய ஊழல் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் விருதுநகர் நகர் மாவட்டமும் ஒன்று என்பதைச் சுட்டிக்காட்டி, இத்திட்டத்திற்காக மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
ஆனால், இத்திட்டத்திற்கு சிறப்பு நிதி ஏதும் அளிக்கப்படமாட்டாது என்றும், வழக்கமான நிதியைக் கொண்டே வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் பதில் கூறிவிட்டார்.
தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப்பெருளை வழங்க பெட்ரோலியம் நிறுவனத்தை வலியுறுத்தினோம். தற்போது அக்கோரிக்கை ஏற்கப்பட்டு போதிய அளவு மூப்பொருள் வழங்கப்பட்டு வருகிறது.
அத்துடன், விருதுநகர் வழியாக வாரம் 3 முறை மட்டுமே இயக்கப்படும் சிலம்பு ரயிலை தினந்தோறும் இயக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைந்து வருகிறது. ஆனால், மத்திய அரசோ இதை ஏற்க மறுக்கிறது. நித்தியானந்தா உட்பட நாட்டில் உள்ள அத்தனை போலி சாமியார்களும் மோடியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் உள்ளனர்.
பொள்ளாச்சி சம்பவம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கேட்டபோது அமைச்சர்கள் யாரும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர். தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. காவல்துறை மற்றம் நீதித்துறை இதுபோன்ற வழக்குகளில் காலதாமதம் செய்வதால் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது.
தமிழகத்தில் முதல்வர் பழனிச்சாக்கும், துணை முதல்வர் பன்னீர்செல்வத்திற்கும் தேர்தல் நடத்துவதில் விருப்பம் இல்லை. அவர்கள் இருக்கும் வரை தமிழகத்தில் எந்த தேர்தலும் நடக்காது"என்றார்.