"குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தான், அதற்காக ரோட்டில் வைத்து சுட்டுத்தள்ளுவது என்பதை ஏற்க முடியாது" என தெலங்கானா என்கவுண்ட்டர் தொடர்பாக திருச்சி எம்.பி., திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
திருச்சி எம்.பி.,யும் தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவருமான திருநாவுக்கரசர் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத செயல்களை செய்துவருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ.,க்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு சரியான பாடம் கற்பித்துள்ளனர். அவர்களை விலைக்கு வாங்கமுடியவில்லை.
இதற்குப் பிறகாவது பாரதியஜனதா கட்சி ஜனநாயக பாதைக்கு திரும்பவேண்டும். இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. விலைவாசி உயர்வு அதிகமாக உள்ளது. 30 கோடி பேர் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இந்தியாவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தமிழகத்தில் மட்டும் சுமார் ஒரு கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.
வெங்காயம் விலை உயர்வுக்கு பொறுப்பான முறையில் பதில் சொல்லவேண்டிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், ‘நான் வெங்காயம் சாப்பிடும் குடும்பத்தில் இருந்து வரவில்லை,’ என்கிறார்.
வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று மக்களவையில் கூறுவது தவறான பதிலாகும். பொறுப்பான பதவியில் இருப்பவர், மக்கள் பிரச்சினையில் நிதானமாகவும், மக்களை காயப்படுத்தாமலும் பதில் அளிக்கவேண்டியது அவரது கடமை. அவரது பதிலால் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படவேண்டும். அதிமுக முறையாக இடஒதுக்கீடு செய்திருந்தால் இந்த பிரச்சனையில் திமுக நீதிமன்றம் சென்றிருக்காது.
ஒதுக்கீடு முறையாக செய்யாத காரணத்தினால் தான் திமுக நீதிமன்றம் சென்றது. அரசில் உள்ளவர்கள் முறைகேடு செய்வதும், எதிர்க்கட்சிகள் நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடுவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது.
தெலங்கானாவில் நான்கு குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டது குறித்ததற்கான காரணம் விசாரணையில் தான் தெரியவரும். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள் தான், அதற்காக ரோட்டில் வைத்து சுட்டுத்தள்ளுவது என்பதை ஏற்க முடியாது. நான்கு பேரை சுட்டுக்கொல்லுவது இடைக்கால நிவாரண செயலாக இருக்கக்கூடாது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டங்கள் மூலம் தண்டிக்கப்படவேண்டும், என்றார்.