இரா.முத்தரசன்: கோப்புப்படம் 
தமிழகம்

உள்ளாட்சி தேர்தல்: சந்தேகத்தின் நிழல் விழாதபடி நேர்மையாக நடத்துக; முத்தரசன் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

மாநில தேர்தல் ஆணையம் சந்தேகத்தின் நிழல் விழாதபடி நேர்மையாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (டிச.6) வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் ஊரகப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை கடந்த 02.12.2019 அன்று வெளியிட்டது. முன்னதாக மாநிலத் தேர்தல் ஆணையம் 28.11.2019 அன்று கூட்டிய அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், நகர்ப்புற, ஊரகப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நாளில் நடத்தப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட கருத்தாக முன்வைத்தன. இதனை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. மாறாக ஊரகப் பகுதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டன.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில், சட்ட நடைமுறைகளை முழுமையாக நிறைவு செய்து தேர்தல் தேதிகள் அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மாநில தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்தியிருந்தது. இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளவில்லை. மாறாக புதிதாக அமைக்கப்பட்ட 9 மாவட்டகளில் வார்டு எல்லைகள் வரையறுக்கப்படாதது, சுழற்சி முறை இடஒதுக்கீடு செய்யாதது போன்ற குளறுபடிகள் வேண்டுமென்றே தொடர அனுமதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றத்தில் 9 மாவட்டங்களில் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையமே ஒப்புக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

தேர்தல் ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் வழங்க வேண்டிய ஆவணங்கள், படிவங்கள் முறையாகவும், முழுமையாகவும் இதுவரை வழங்கப்படவில்லை. நேரில் சென்று கேட்கும் போதும் பொறுப்பான பதில் கூறும் அலுவலர்களும் இல்லாத அவலம் மாநில தேர்தல் ஆணையத்தில் நிலவுகிறது.

அரசியலமைப்பு சட்டத்தின்படி அதிகாரம் பெற்று இயங்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளில் சந்தேகத்தின் நிழல் விழாதபடி விலகி நின்று, சுயேட்சையாக செயல்பட்டு, சுதந்திரமான நியாயமான முறையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வர வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT