உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி இருப்பதாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் புறநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.6) ஆலோசனை மேற்கொண்டார்.
ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை இந்தத் தீர்ப்பினை முழுமையாக வரவேற்கிறோம். தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளோம்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை மாநிலத் தேர்தல் ஆணையம் முழுமையாகச் செயல்படுத்தும் என நம்பிக்கை உள்ளது. அதிமுகவைப் பொறுத்தவரை உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கேற்று அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதுதான் எங்களுடைய நிலைப்பாடு.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளதால் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி எந்தெந்த வார்டில் யார் போட்டியிடுவது என முடிவு செய்து வேட்பாளர் பட்டியல் முறைப்படி அறிவிக்கப்படும். கூட்டணிக் கட்சிகள் ஒன்றாக இணைந்து உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் வகையில் கடுமையாக உழைப்போம்.
திமுக தலைவர் ஸ்டாலினைப் பொறுத்தவரை தோல்வி பயம் காரணமாக எப்போது தேர்தல் அறிவித்தாலும் நீதிமன்றத்திற்குச் சென்று தடை பெறுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். ஆனால், திமுகவின் முயற்சிக்கு தற்போது உச்ச நீதிமன்றம் தடை போட்டு விட்டது. வழக்கமாக தேர்தலை அறிவித்தவுடன் மக்களைச் சந்தித்து வாக்கு கேட்பது தான் ஜனநாயகம். அதை விட்டுவிட்டு தோல்வி பயத்தில் திமுகவினர் உள்ளனர்" என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.