சிபிசிஐடி அதிகாரிகள்போல் நடித்தவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக சர்ச்சைக்குள்ளான வடமாநில வியாபாரி மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் டி.ரூடா ராம் சவுத்ரி (36). 10 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் வந்த இவர், அனுப்பர்பாளையம் புதூர் பகுதியில் வசிக்கிறார். ஓடக்காடு பகுதியில் மளிகை மொத்த வியாபார நிறுவனம் நடத்தி வருகிறார். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் இருந்து வந்தன. இந்நிலையில், கடந்த 25-ம் தேதி அவரது மளிகை நிறுவனத்துக்கு சென்ற 6 பேர் கும்பல், தாங்கள் சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து வருவதாக அறிமுகம் செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரின்பேரில் சோதனையிட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனால், அச்சமடைந்த ரூடா ராம் சவுத்ரி, அவர்களிடம் சமாதானம் பேசியுள்ளார். இதைப் பயன்படுத்தி, அந்த கும்பல் ரூ.5 லட்சம் பணம் கொடுத்தால், சோதனையை ரத்து செய்துவிட்டு செல்வதாக தெரிவித்துள்ளனர். இறுதியாக, மூன்றரை லட்சத்தில் பேரம் முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அவர்களுக்கு ரூடா ராம் சவுத்ரி ரூ.3 லட்சம் கொடுத்துள்ளார் என்பது, காவல் துறை அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஏற்கெனவே இஸ்லாமிய கட்சி ஒன்றை சேர்ந்த நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கோவை யை சேர்ந்த 3 பேரை அனுப்பர் பாளையம் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த விவகாரத்தைப் பொறுத்த வரை, தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் விற்பனை செய் வதை உறுதி செய்த பிறகே, பணம் கேட்டு வியாபாரியை சம்பந்தப்பட்ட கும்பல் அணுகியுள்ளது. ஆனால், வியாபாரி மீது போலீஸார் எந்தவித நடவடிக்கையும் ஏன் எடுக்கவில்லை என்பதே, சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்வியாக உள்ளது.
காவல் துறை மீது சந்தேகம்
இதுதொடர்பாக நேர்மை மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி ‘இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, 'சம்பந்தப்பட்ட வியாபாரி புகையிலை பொருட்கள் விற்கவில்லை என்றால், ஏன் அவர்களுக்கு பயப்பட வேண்டும். ஏற்கெனவே, திருப்பூரில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக, வடமாநில வியாபாரிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். புகையிலை பொருட்கள் மொத்த அளவில் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட வியாபாரி மீது போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. திருப்பூரில் அதிகரித்து வரும் போதை பாக்குகள், புகையிலை பொருட்கள் விற்பனையை முற்றி லும் தடுக்க வேண்டும் என்பதே, எங்களது நோக்கம். மேற்கூறப்பட்ட விவகாரத்தில் மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள் சிறப்பு கவனம் செலுத்தி, உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
மாநகர காவல் துறை வடக்கு சரக துணை ஆணையர் வெற்றி வேந்தனிடம் கேட்டபோது, 'வியாபாரியிடம் விசாரணை நடத்தி னோம். அந்த கும்பலுக்கு பயந்து அவர் பணம் கொடுத்துள்ளார். அவரிடம் புகையிலை பொருட்கள் எதுவும் இல்லை' என்றார்.