வண்ணாரப்பேட்டை - திருவொற்றி யூர் இடையிலான மெட்ரோ ரயில் திட்டத்துக்காக முதல்கட்டமாக 3 இணை மெட்ரோ ரயில்கள் கோயம்பேடு பணிமனையை நேற்று வந்தடைந்தன.
சென்னையில் தற்போது 45 கி.மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் அடுத்தகட்டமாக வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவொற்றியூர் இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. மொத்தம் 9 கி.மீ தூரம் உள்ளஇந்த வழித்தடத்தில் 8 மெட்ரோரயில் நிலையங்களை அமைக்கப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சர் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டை யார்பேட்டை, டோல்கேட், தாங்கல்,கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் பகுதியில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதேபோல், தண்டவாளங்கள், சிக்னல்கள் அமைக்கும் பணிகளும் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த தடத்தில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.
இந்த மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 10 இணை மெட்ரோ ரயில்கள் தேவைப்படுகின்றன. இதற்கிடையே, ஆந்திர மாநிலம் சிட்டியில் ஆல்ஸ் டோம் தொழிற்சாலையில் தயா ரிக்கப்பட்ட 3 இணை மெட்ரோ ரயில்கள் கோயம்பேட்டில் உள்ளபணிமனைக்கு நேற்று கொண்டுவரப்பட்டன.
இந்த மெட்ரோ ரயில்களில் பிரேக், தரம், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் குறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் பல்வேறுகட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். எஞ்சியுள்ள 7 இணை ரயில்கள் 2020 பிப்ரவரிக்குள் தயாரிக்கப்பட்டு மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.