தமிழகம்

என்எல்சி ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை: சென்னையில் இன்று மீண்டும் நடக்கிறது

செய்திப்பிரிவு

ஊதிய உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி தொழிற்சங்கங்கள் தொழிலாளர் ஆணையருடன் சென்னையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய மாற்று ஒப்பந்தம் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இதையடுத்து, 2012 ஜனவரி முதல் தேதி முதல் புதிய ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தக்கோரி தொழிற்சங்கங்கள் என்எல்சி நிர்வாகத்துடன் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து, என்எல்சி நிரந்தர தொழிலாளர்கள் கடந்த மாதம் 20-ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய அரசு மண்டல தொழிலாளர் ஆணையர் கே.சேகர் முன்னிலையில் இதுவரை 4 சுற்று முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. இவை அனைத்தும் தோல்வியடைந்தன.

இதையடுத்து, இப்பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்காக கடந்த மாதம் 30-ம் தேதி டெல்லியில் உள்ள தலைமை தொழிலாளர் ஆணையர் மித்ரா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதிலும் உடன்பாடு ஏதும் ஏற்படாமல் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்நிலையில், இன்று மீண்டும் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. துணை மண்டல தலைமை தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் என்எல்சி தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகத் தரப்பினர் பங்கேற்கின்றனர்.

SCROLL FOR NEXT