தமிழகம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் 

செய்திப்பிரிவு

மதுரையில் அமையும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை என மாநில சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் 224.24 ஏக்கரில் 1,264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2018-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அப்பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், மற்ற மாநிலங்களில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு அடிப்படைப் பணிகளுக்காக கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வெறும் ரூ.5 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் இன்று இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவுகள் நனவாகி வருகின்றன.

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் தமிழக அரசால் மத்திய அரசிடம் ஒப்படைப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மொத்தம் ரூ.1264 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதில், முதல் கட்டமாக ரூ.5 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்தை ஜப்பான் நாட்டின் சிஜிஐ கூட்டுறவு முகமை நிதி உதவியுடன் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டிடம் இருந்து நிதி கிடைத்தவுடன் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டமிட்டபடி கட்டப்படும்" என்றார்.

மேலும், தமிழகத்தில் புதிதாக மருத்துவக் கல்லூரிகளைக் கட்ட ரூ.136 கோடி அடிப்படை நிதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்

SCROLL FOR NEXT