ஆந்திர மாநிலத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 20 தமிழர்களின் வாரிசுகளுக்கு சத்துணவு, அங்கன்வாடியில் பணி வழங்கப்பட்டது. இதற்கான ஆணைகளை இன்று முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
இது குறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''ஆந்திர மாநிலம் ஸ்ரீவாரி மெட்டு, ஈசாகுண்டாவில் உள்ள சேஷாசல வனப் பகுதியில் ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்புப் படை, கடந்த ஏப்ரல் 7-ம் தேதி அதிகாலை துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் திருவண்ணாமலை, தருமபுரி, சேலத்தை சேர்ந்த 20 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இறந்த 20 தமிழர்கள் குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் பெரும்பாலும், இளம் விதவைகளாக இருப்பதால், அவர்களின் எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு ஆகியவை கருத்தில்கொள்ளப்பட்டன. இதன்படி, 17 பேரின் வாரிசுகளுக்கு சமையல் உதவியாளர், 2 பேரின் வாரிசுகளுக்கு சத்துணவு ஒருங்கிணைப்பாளர், ஒருவரின் வாரிசுக்கு அங்கன்வாடி உதவியாளர் பணி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
தலைமைச் செயலகத்தில் இன்று 5 பேரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். ஆணையை பெற்றுக் கொண்டவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்'' என்று கூறப்பட்டுள்ளது.