திருவாரூர்
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் கிராம மக்கள் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சி னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் எதிர் பார்க்கின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சித் தலைவர், 3,180 ஊராட்சி வார்டு உறுப்பினர், 176 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு வரும் 27 மற்றும் 30-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் 1,771 மையங்களில் 7 லட்சத்து 96 ஆயிரத்து 180 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
தொடர்ந்து, மறைமுகத் தேர்தல் அடிப்படையில் ஊராட்சி துணைத் தலைவர், 10 ஊராட்சி ஒன்றி யக்குழு தலைவர்கள், துணைத் தலைவர்கள், ஒரு மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, பிரதிநிதிகள் பதவி ஏற்க உள்ளனர். இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வ தில், அரசியல் கட்சிகள் மும்மு ரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலின் மூலம் நீண்ட நாட்களாக தாங்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
உதாரணமாக, கடந்த 2014-ம் ஆண்டு திருவாரூர் அருகே அம்மையப்பன் ஊராட்சியில், தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக் காக தாங்கள் குடியிருந்த பகுதிகளை விட்டுக்கொடுத்த அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், அரசு அனுமதியுடன் அம்மையப்பனில் அம்மா நகர் என்ற பகுதியை அமைத்து வசித்து வருகின்றனர். அவர்களுக்கு தெருவிளக்கு, குடிநீர், சாலை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் கடந்த 5 ஆண்டுகளாக செய்து கொடுக்கப் படவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல, திருத்துறைப் பூண்டி அருகே ஆப்பரக்குடி ஊராட்சியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் வசித்து வருகின் றனர். அங்கு மயானத்துக்குச் செல்ல சாலை இல்லாமல் வயல்வெளிகளில் இறங்கிச் செல்ல வேண்டி இருப்பதாகவும், மழைக்காலங்களில் யாரேனும் உயிரிழந்துவிட்டால், அவரது உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்வது மிகுந்த சவாலாக இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருத்துறைப்பூண்டி ஒன்றியம் ஆலத்தம்பாடியிலிருந்து, விக்கிரபாண்டியம் வரை 10 கி.மீ சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற பொங்கு சனீஸ்வரர் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் உள்ள பக்தர்கள், இந்தச் சாலை வழியாகவே வந்து செல்லும் நிலையில், இச் சாலை மிகவும் சேதமடைந்துள்ளதால், அவர்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இதுபோல, மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு ஏற்படுத்துவதற்கு, வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் ஒரு வாய்ப்பாக அமையும் என அனைத்துத் தரப்பி னரும் தேர்தலை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து ஓய்வுபெற்ற ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் ஆர்.ராமலிங்கம் கூறியதாவது:
உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இல்லாததால் கிராம ஊராட்சி, வட்டார ஊராட்சி மற்றும் மாவட்ட ஊராட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து வரவேண்டிய 14-வது நிதிக்குழு மானிய நிதி பல கோடி ரூபாய் கிடைக்கவில்லை. கிராம ஊராட்சி ஒவ்வொன்றுக்கும் ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான நிதி ஆதாரம் வழங்கப்படவில்லை. இதனால் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக தடைபட்டுள்ளன.
மாநில நிதி ஆணையத்திலிருந்து ஊராட்சிகளுக்கு வரும் நிதியில், ஊராட்சிகளில் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள், துப்புரவா ளர்கள், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கவும், மின்சார கட்டணம் செலுத்துவதற்கும் போதுமானதாக இருக்குமே தவிர, எஞ்சியுள்ள நிதியைக் கொண்டு கிராம மக்கள் அன்றாடம் எதிர்கொள்கின்ற பிரச்சினை களுக்கு தீர்வை தரமுடியாது. எனவே, மக்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சேர்ப்பதற்கு மட்டுமின்றி, மத்திய அரசின் நிதியைப் பெறுவதற்கும் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் ஒரு தீர்வாக அமையும் என்றார்.