தமிழகம்

விருதுநகரில் கிணற்றில் கொட்டப்பட்ட காலாவதி ஆகாத மருந்து, மாத்திரைகள்: பொதுமக்கள் அதிர்ச்சி

இ.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்ட காலாவதி ஆகாத மருந்து மாத்திரைகள் கட்டுக்கட்டாக கிணற்றில் கொட்டப்பட்டதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனை உள்பட 11 மருத்துவமனைகளும், 58 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 35 ஆயிரம் பிரசவங்கள் நடந்துள்ளன.

அதோடு, பல்வேறு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் தவிர விருதுநகர், சிவகாசி, சாத்தூர் பகுதியில் இஎஸ்ஐ மருத்துவமனைகளும் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சாத்தூர் அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பாழடைந்த கிணற்றில் நேற்று முன் தினம் ஏராளமான மருந்து, மாத்திரைகள் பெட்டி, பெட்டியாக கொட்டப்பட்டுக் கிடந்தன.

அவைகளை வெளியே எடுத்து வந்து பார்த்தபோது அவை அத்தனையும் 2020-ம் ஆண்டு வரை பயன்படுத்த தகுந்தவை என்றும் அனைத்தும் காலாவதி ஆகாத மருந்து, மாத்திரைகள் என்பதும் தெரியவந்தது. இதைப் பார்த்த கிணற்றின் உரிமையாளரும், அப்பகுதி பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இத்தகவல் வேகமாக பரவியதால் மருத்துவத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று நேற்று விசாரணை நடத்தினர். அப்போது, அவை அனைத்தும் இதய நோய், சுவாசக் கோளாறு போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் விலை உயர்ந்த மருந்து, மாத்திரைகள் என்பதும், இவை அனைத்தும் ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட மருந்து, மாத்திரைகள் என்பதும் தெரியவந்தது.

அதையடுத்து, மதுரையில் உள்ள ஈ.எஸ்.ஐ. மருத்துவ அதிகாரிகள் நேற்று பிற்பகல் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், கிணற்றில் கொட்டப்பட்டுக் கிடக்கும் மருந்து, மாத்திரைகள் எந்த ஈ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வழங்கப்பட்டவை என்றும், எப்போது வழங்கப்பட்டவை என்பது குறித்தும் மருத்துவமனை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

அப்போது, கிணற்றின் உரிமையாளரிடம் மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, தற்போது மட்டுமின்றி பல மாதங்களுக்கு முன்பும் இதேபோன்று மருந்து, மாத்திரைகளை பெட்டி, பெட்டியாக கொட்டப்பட்டிருந்ததாகவும், இதுதொடர்பாக சாத்தூர் வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த விசாரணையோ நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், காலாவதி ஆகாத மருந்து, மாத்திரைகள் என்பதால் சமூக விரோதிகளுக்கு சட்டவிரோதமாக இவை வழங்கப்பட்டதா அல்லது தனியாரிடம் விற்பனை செய்யப்பட்டு, அதிகாரிகளுக்குப் பயந்து யாருக்கும் தெரியாமல் கிணற்றில் கொட்டப்பட்டதா என்பது குறித்தும் மருத்துவத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT