வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி நூதன மோசடியில் ஈடுபட்டதாக பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
வேளச்சேரியைச் சேர்ந்த சந்துரு, முகப்பேரைச் சேர்ந்த பிரவீன் மற்றும் சிலர் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில், "சாலிகிராமத்தைச் சேர்ந்த மீனா மற்றும் பாரிமுனை கடற்கரை சாலை பகுதியைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரும் தங்களிடம் வங்கியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை பெற்றுக் கொண்டு தங்களுக்கு தெரியாமலே டி.வி, குளிர்சாதன பெட்டி, ஏசி மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தங்களுடைய பெயரில் கடனில் வாங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து விட்டனர்.
அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தனர்.
மோசடி தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார் மீனா மற்றும் அவரது கூட்டாளி சங்கரை நேற்று முன்தினம் கைது செய்துள்ள னர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.