கூடுவாஞ்சேரியில் உள்ள ஜியான் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்னிந்திய 2-ம் அமர்வில் கடந்த மே மாதம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேகரமாகும் குப்பை நந்திவரம் ஏரியில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், ஏரியில் உள்ள நீர் மாசுபடுகிறது. அதிலிருந்து துர்நாற்றமும் வீசுகிறது. அங்கு தேங்கியுள்ள குப்பை அடிக்கடி எரிக்கப்படுவதால் உருவாகும் புகை காரணமாக காற்று மாசும் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி யைச் சுற்றிலும் வசிக்கும் குடியிருப்புவாசிகள் பல்வேறு உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். எனவே பேரூராட்சி நிர்வாகம் நந்திவரம் ஏரியில் குப்பையைக் கொட்ட தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த அமர்வு, இது தொடர்பாக நந்திவரம்- கூடுவாஞ்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் ஆஜராகி பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் இந்த மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்பத்துறை உறுப்பினர் பேராசிரியர் ஆர்.நாகேந்திரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, நந்திவரம் ஏரியில் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்ட இடைக்காலத் தடை விதித்த அமர்வின் உறுப்பினர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் இதுவரை நேரில் ஆஜராகாமலும், பதில் மனு தாக்கல் செய்யாமலும் இருந்து வருவதையொட்டி, அவருக்கு பிணையில் வெளிவர முடியாத பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டனர். பின்னர் மனு மீதான அடுத்த விசாரணையை செப்டம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.