இடைத்தரகர் குணபாலனை தூப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார் வெற்றிவேலன் 
தமிழகம்

கடன் கிடைக்காததால் ஆத்திரம்: வங்கி மேலாளர், இடைத்தரகர் மீது தாக்குதல் - கோவையில் துப்பாக்கியுடன் தொழிலதிபர் கைது

செய்திப்பிரிவு

கோவையில் கடன் கிடைக்காததால் ஆத்திரமடைந்த தொழிலதிபர், துப்பாக்கி முனையில் வங்கி மேலாளர், இடைத்தரகரை சரமாரியாக தாக்கி, கத்தியால் குத்தினார். அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோவையை அடுத்த சோமையம்பாளையம் அருகேயுள்ள பத்மாவதி நகரைச் சேர்ந்தவர் வெற்றிவேலன் (44). இவர், சித்தாபுதூர் மற்றும் ஒண்டிப்புதூரில் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். வங்கியில் உள்ள ரூ.30 லட்சம் கடனை அடைக்கவும், தொழில் அபிவிருத்திக்காகவும் ரூ.1 கோடி தொகை அவருக்கு தேவைப்பட்டது. இதற்காக அவர், தன் சொத்துகளை அடமானம் வைத்து, சுங்கத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கிளையில் ரூ.1 கோடி கடனாகப் பெற முடிவு செய்தார்.

சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்றபோது, சிவானந்தா காலனியைச் சேர்ந்த இடைத்தரகர் குணபாலன் (72), வெற்றிவேலனுக்கு அறிமுகமானார். அவர் மூலம், சுங்கம் கிளையில் உள்ள வங்கியில் கடன் கேட்டு கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் வெற்றிவேலன் விண்ணப்பித்தார்.

‘‘வேறொரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.30 லட்சம் கடன் தொகை உள்ளது. அந்த கணக்கை இந்த வங்கியோடு இணைத்து, கடன் தொகையை கழித்துவிட்டு மீதி தொகையை தர வேண்டும்’’ என அவர் வங்கியின் முதன்மை மேலாளர் சந்திரசேகரிடம் விண்ணப்பித்து இருந்தார். கடன் பெற்றுத் தருவதற்காக, வெற்றிவேலன் முதல்கட்டமாக ரூ.3 லட்சம் கமிஷன் தொகையை குணபாலனுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. எனினும், போலீஸார் இதை மறுத்தனர்.

இந்நிலையில், வெற்றிவேலனுக்கு வங்கிக் கடன் கிடைக்கவில்லை. இதனால், ஆத்திரத்தில் இருந்த குணசேகரன், நேற்று முன்தினம் சுங்கத்தில் உள்ள வங்கிக்கு சென்றார். முதன்மை மேலாளர் அறையில் இருந்த குணபாலனை துப்பாக்கியை காட்டி மிரட்டி சரமாரியாக கைகளால் தாக்கினார். இதை தடுக்க வந்த மேலாளர் சந்திரசேகர், ஊழியர்கள் சிலருக்கும் சரமாரி அடி விழுந்தது.

அப்போது துப்பாக்கி கீழே விழுந்ததால் தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் குணபாலன், சந்திரசேகரை வெற்றிவேலன் குத்தினார். அங்கு திரண்ட மற்ற ஊழியர்கள், வெற்றிவேலனை பிடித்தனர்.

ரேஸ்கோர்ஸ் போலீஸில், வங்கி மேலாளர் சந்திரசேகர் அளித்த புகாரின் பேரில், கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வெற்றிவேலனை கைது செய்து ஜே.எம்.3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்தது ஏர்கன் எனத் தெரியவந்தது. கத்தி, ஏர்கன்னை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸார் கூறும்போது, ‘‘அந்த வங்கியின் கோவை கிளையில் ரூ.30 லட்சம் வரை மட்டுமே கடன் தொகை அளிக்க அனுமதியுள்ளது. அதற்கு மேல் கடன் பெற சென்னை அலுவலகத்தில் ஒப்புதல் பெற வேண்டும். அதன்படி, கோவை வங்கி நிர்வாகத்தினர், வெற்றிவேலனின் ஆவணங்களை சென்னை தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளனர். அவர் முன்னரே வங்கியில் கடன் நிலுவை வைத்திருந்ததால், கடன் கிடைக்கவில்லை. இவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது என விசாரிக்கப்படுகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT