கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் இன்று (புதன்கிழமை) காலை கொடியேற்றம் நடைபெற்றது.
இதற்காக சுவாமி சன்னதி முன்புள்ள கம்பத்தடி மண்டப தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கலச பூஜை நடத்தினர்.
மண்டபம் முன் சுவாமி பிரியாவிடையுடனும், மீனாட்சியம்மனும் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
கொடிமரத்தில் தர்ப்பைப் புல் கட்டியும், கலச நீர் ஊற்றியும் பூஜைகள் நடத்தப்பட்டு, கார்த்திகை திருநாள் கொடியேற்றம் சரியாக 10.34 மணிக்கு நடைபெற்றது.
அதன் பின்னர், தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலில், இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வான மகா தீபம் வரும் 10ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்று அதிகாலையில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் பரணி தீபமும், மாலை 6 மணியளவில் திருவண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
இதனையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இன்று மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் கார்த்திகை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.