தமிழகம்

எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ரூ.6 லட்சம் நிதி: தேவையான நிதியுதவி கிடைத்துள்ளது - நடிகை பரவை முனியம்மா மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

உடல்நல பாதிப்பால் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், தனக்கு தேவையான நிதியுதவி கிடைத் துள்ளதாக நடிகை பரவை முனியம்மா மகிழ்ச்சி தெரிவித்தார்.

மதுரையைச் சேர்ந்தவர் பரவை முனியம்மா. நாட்டுப்புறப் பாடல் மூலமாக சினிமாவுக்குள் நுழைந்த இவர் ‘தூள்’, ‘காதல் சடுகுடு’, ‘தேவதையைக் கண்டேன்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர், மதுரை காளவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். படவாய்ப்பு களின்றி வறுமையில் மிகவும் சிரமப்பட்டு வருவதாக அவரது பேட்டி ஊடகங்களில் வெளியாயின. இதையடுத்து, நடிகர்கள் விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன், சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் அவருக்கு நிதியுதவி வழங்கினர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் குன்றியுள்ள பரவை முனியம் மாளுக்கு எம்.ஜி.ஆர் அறக்கட் டளை மூலம் ரூ. 6 லட்சம் நிதியுதவி, குடும்பச் செலவுக்காக மாதம்தோறும் ரூ. 6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். அவரது மருத்துவச் செலவை எம்ஜிஆர் அறக்கட்டளையே ஏற்கும் என அறிவித்தார். இதன்படி, இந்த நிதியை மருத்துவமனையில் பரவை முனியம்மாளிடம் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நேற்று வழங்கினர்.

இதுகுறித்து பரவை முனியம்மா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி: தற்போது உடல்நிலை நன்றாக உள்ளது. தமிழக முதல்வர் மற்றும் நடிகர்கள் நிதியுதவி வழங்கி உள்ளனர். குடும்பச் செலவுக்கு மாதம்தோறும் ரூ. 6 ஆயிரம் வழங்குவதாக முதல்வர் அறிவித்தது மகிழ்ச்சி அளிக் கிறது. தக்க சமயத்தில் உதவி களை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வார்த்தைகளே இல்லை என்றார்.

SCROLL FOR NEXT