வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழையும், ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ்.பாலச் சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடல் பகுதி யில், இலங்கை மற்றும் தென் தமிழக கடற்கரை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதன் தாக்கத்தால் 3-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூரில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. ராமநாதபுரம், நீலகிரி மாவட்டம் கெட்டி, கூடலூர் சந்தை ஆகிய இடங்களில் 9 செ.மீ., பெரம்பலூர் மாவட்டம் அகரம் சீகூர், நாகை மாவட்டம் தரங்கம்பாடி, அணைக் காரன்சத்திரம், சீர்காழி, ராமநாதபுரம் மாவட்டம் தீர்த்தாண்டதானம், கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் ஆகிய இடங்களில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும். ராமநாத புரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இயல்பை விட 13% அதிகம்
இந்த வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தமிழகம், புதுச்சேரியில் 42 செ.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 36 செ.மீ. மழை பெய்யும். தற்போது 13 சதவீதம் அதிகமாக மழை கிடைத்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீச வாய்ப்பு உள்ள தால், அடுத்த 24 மணி நேரத்துக்கு மீனவர்கள் குமரிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவு றுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.