தமிழகம்

நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்போரைக் காக்க என்ன நடவடிக்கை?- மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி 

செய்திப்பிரிவு

கடற்கரை, கோயில் குளங்களில் மூழ்கி ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது என்பதால் சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வரி என்பவர் இதுகுறித்த பொது நல வழக்கை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.

அவரது மனுவில், “தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 884 ஆக உள்ளது.

தமிழகத்தில் நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வாக இருக்கிறது என்பதால் கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், கோயில் குளங்கள், அருவிகளில் 24 மணிநேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

நீர்நிலைகளில் உயிரிழந்தவர்கள் 90 விழுக்காட்டினர் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், இந்த மரணங்களைத் தடுக்க கடற்கரைகளில் கண்காணிப்புக் கோபுரங்களை அமைக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கோயில் குளங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய இந்து அறநிலையத் துறை இணை ஆணையர்களுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

மேலும், தமிழகத்தில் உள்ள அருவிகள், ஆறுகள், உள்ளிட்ட நீர்நிலைகள், சுற்றுலாத் தளங்களில் உயிரிழப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து அறிக்கை பெற்று தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

கடற்கரைப் பகுதிகளில் உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக மாநில அரசுக்கு இதுவரை ஒதுக்கிய நிதி தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டது.

SCROLL FOR NEXT