விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தளவாட பொருள்கள் இன்று ஜப்தி சசெய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியில் ஆதிதிராவிடர் காலனி அமைப்பதற்காகக் கடந்த 1991-ம் ஆண்டு ஒரு ஏக்கர் 55 சென்ட் நிலம் வருவாய்த்துறையால் கையகப்படுத்தப்பட்டது.
அந்த இடத்திற்காக அரசு கொடுத்த தொகை போதவில்லை என்பதால் கூடுதல் தொகை கேட்டு இடத்தின் உரிமையாளர்கள் உமாமகேஸ்வரி, பொன் வெங்கடேசன், குமார் உட்பட சிலர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்நத்தில் மனு தாக்கல் செய்தனர்.
நீதிமன்றம், நில உரிமையாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரப்படி நிலத்திற்கான கூடுதல் தொகை வழங்கப்படாததால் ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவகத்தில் உள்ள அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவகத்திலிருந்த மரமேஜைகள், நாற்காலிகள் , மின்விசிறிகள், கணினிகள், பீரோ, ஜீப் உள்ளிட்ட சுமார் ரூ.9.50 லட்சம் மதிப்பிலான பொருள்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து அலுவலகத்தின் வெளியே கொண்டுவந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின், வருவாய் துறையினருக்கும் மனுதாரர்களுக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, குறிப்பிட்ட பணத்தைச் செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் கேட்கப்பட்ட நிலையில் ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் தாலுகா அலுவலகத்தில் மீண்டும் ஒப்படைக்கப்பட்டன.