மேட்டுப்பாளையம் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.டி.காலனி கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள ஒரு குடியிருப்பின் பின் பக்கத்தில் சுமார் 80 அடி நீளம், 20 அடி உயரத்தில் கருங்கல் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. கனமழையால் நேற்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சுவர் இடிந்து, அருகில் இருந்த 4 வீடுகளின் மீது விழுந்தது.
சாதாரண ஓட்டு வீடுகளின் மீது, கனமான கருங்கல் சுவர் இடிந்து விழுந்ததால், அந்த வீடுகளும் இடிந்தன. இதில், 4 வீடுகளும் முற்றிலுமாக சிதைந்து மண்ணுக்குள் புதைந்தன. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்.
சுற்றுச்சுவர் அமைத்தவரைக் கைது செய்ய வேண்டும் என திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக இன்று (டிச.3) விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நேற்று அதிகாலை வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தது மனவேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் உற்றார் உறவினர்கள் குடும்பத்திற்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழக அரசு மற்ற இடங்களிலும் ஆய்வு செய்து இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடக்காத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.