மத்திய அரசுக்கு சமூகப் பார்வை கூட இல்லை என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (டிச.3) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய பொருளாதாரத்தை 2024 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன், அதாவது 5 லட்சம் கோடி டாலராக உயர்த்தப் போவதாக பிரதமர் மோடி நம்பிக்கையுடன் பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவர் கூற்றின்படி தற்போதுள்ள 2.6 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமெனில் வளர்ச்சி இரு மடங்காக இருக்க வேண்டும்.
ஆனால், முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதத்தில் இருந்து 4.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஆறரை ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை இந்தியப் பொருளாதாரம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இன்று நாடு முழுவதும் விற்பனையில் சரிவு, உற்பத்தியில் வீழ்ச்சி, வேலையிழப்பு, தொழிற்சாலைகள் மூடல், ஆட்குறைப்பு போன்றவை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
நடைமுறையில், இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஐந்தாவது இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது. ஆனால், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி குறித்து மத்திய அரசோ, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனோ கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. குறுகிய காலத்தில் அனைத்தும் சரியாகி விடும் என்று கூறுவது ஒரு அலாதியான மூடநம்பிக்கையாகும்.
மத்திய அரசு திட்டங்களை தீட்டுவதற்காக புள்ளி விவரங்களை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் தேசிய புள்ளியியல் நிறுவனம். ஆனால், அந்த புள்ளியியல் நிறுவனம் வழங்குகிற அறிக்கைகளை வெளியிடாமல் முடக்குகிற பணியை மத்திய அரசு செய்து வருகிறது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுவதாக கூறப்பட்ட புள்ளி விவர அறிக்கையை வெளியிடக் கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு மத்திய அரசுக்கு இருக்கிற பிரச்சினையே புள்ளி விவர சிக்கல் தான். தேசிய புள்ளி விவர ஆணையத்தின் அறிக்கையை ஏற்க மறுக்கிற அவலநிலை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.
பொதுவாக, 47 வருடங்களில் இல்லாத அளவுக்கு நுகர்வு குறைந்திருக்கிறது. குடும்பத்தினரின் சேமிப்பு 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. புதிய முதலீடுகள் 16 வருடங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தொழில் உற்பத்தி வளர்ச்சி 8 வருடங்களில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி மைனஸ் 5.8 சதவீதமாக கடும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. முதன்மைத் துறைகளின் வளர்ச்சி 14 வருடங்களில் இல்லாத அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் போன்றவற்றின் விலை குறையவில்லை. கடந்த 2014 இல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 412. ஆனால்,
தற்போது ரூ.495 என்கிற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி என்பது மத்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய அரிய வாய்ப்பாகும். அதை இந்த அரசு சரியாக பயன்படுத்தி பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியிருக்கலாம். ஆனால், இந்த அரசு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை.
மத்திய அரசுக்கு சமூகப் பார்வை கூட இல்லை என்பதற்கு பல சான்றுகளை கூற முடியும். குறிப்பாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக கல்விக் கடன் வழங்குவதில் மிகப்பெரிய அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. அதில் வழங்கப்பட்ட மொத்த கடனில் ஏறத்தாழ 70 சதவீதம் பொதுப் பிரிவினருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 2016-17 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட மொத்த கடனில் பொதுப் பிரிவில் ரூபாய் 9 ஆயிரத்து 730 கோடியை 2,75,028 பேருக்கும், பின்தங்கிய சமுதாயத்தினருக்கு ரூபாய் 2,750 கோடியை 94,348 பேருக்கும், பட்டியலின மக்களுக்கு ரூபாய் 926 கோடியை 28,614 பேருக்கும், மலைவாழ் மக்களுக்கு ரூபாய் 391 கோடியை 12343 பேருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
இதனால் சராசரியாக பயடைந்தவர்கள் பொது பிரிவினரில் 67 சதவீதம், பின்தங்கிய பிரிவில் 23 சதவீதம், பட்டியலின மக்களில் 7 சதவீதம், மலைவாழ் மக்களில் 3 சதவீதம் என புள்ளி விவரம் கூறுகிறது. எந்த நோக்கத்திற்காக கல்விக் கடன் வழங்கும் திட்டம் மத்திய காங்கிரஸ் அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டதோ, அதற்கு நேர் எதிரான திசையில் இத்திட்டம் சென்று கொண்டிருப்பதற்கு இது ஒரு சான்றாகும்.
இந்தியப் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. இந்தியாவின் வளர்ச்சி என்பது சமநிலைத்தன்மை கொண்டதாக இல்லை. சராசரியாக ஏழைகளின் வருவாய் 2 சதவீதம் உயர்ந்தால், பணக்காரர்களின் வருமானம் 12 சதவீதம் உயர்கிறது. மேலும், 1 சதவீத பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு, ஒட்டுமொத்த மதிப்பில் 57 சதவீதத்தில் இருந்து கடந்த நான்கு ஆண்டுகளில் 73 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதன்மூலம் பாஜக அரசு யாருக்காக செயல்படுகிறது ? விவசாயிகளுக்கா ? கிராமப்புற மக்களுக்கா ? அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கா ? என்பதற்கு பாஜக பதில் கூற வேண்டும்" என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.