தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை மற்றும் தென்தமிழக கடற்பகுதியில் குறைந்த கற்றழுத்தத் தாழ்வுநிலை தொடர்ந்து நிலவுகிறது. கடந்த 24 மணிநேரத்தில் குன்னூரில் 13 செ.மீ மழையும், ராமநாதபுரத்தில் 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
குமரிக் கடல் பகுதியில் இன்று சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம். சென்னையைப் பொறுத்தவரை நகரில் லேசான மழை இருக்கும். வானம் மேகமூட்டமாக இருக்கும்.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 1 முதல் இன்று வரை 42 செ.மீ. பெய்துள்ளது. இது இயல்பான அளவைவிட 13 சதவீதம் அதிகம்”.
இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்தார்.