மழைநீர் பாதிப்பை சரி செய்வது, மீட்பு பணிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பணிகளில் மாநகராட்சி பணியாளர்களுடன் போலீஸார் இணைந்து பணியாற்ற வேண்டும் என காவல் ஆணையர் போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையிலும் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்துள்ளது. மழைநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை போலீஸார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் இணைந்து மழை பாதிப்பு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
வாட்ஸ்அப் குழு
இதைத் தொடர்ந்து போலீஸ், மாநகராட்சி, மின்துறை அதிகாரிகள் அடங்கிய வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு குறித்த விவரங்களை இதில் பதிவிட்டு யாருக்கு முதலில் தகவல் கிடைக்கிறதோ அவர்கள் உரிய பணியாளர்களுடன் சம்பவ இடம் விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பணி துவங்கியுள்ளது.
மேலும், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி பொது மக்கள், வாகன ஓட்டிகள் சிரமம் இன்றி சாலையைக் கடக்க போக்குவரத்து போலீஸார் உதவ வேண்டும் எனவும் காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.