சு.கோமதிவிநாயகம்
விளாத்தி குளம் அருகே கிராமத்தை நிர்வகிக்கும் கண் பார்வையற்றவரை ஊரே கொண்டாடுகிறது. தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டம் சங்கரலிங்கபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சல்லி செட்டிபட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஜவுளி வியாபாரம்தான் பிரதானம்.
கிராமத்து ஆண்கள் மாதத்தில் பெரும்பாலான நேரங்களில் வியாபாரத்துக்கு வெளியூர்களுக்கு சென்று விடுவர். இக்கிராமத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி த.பரமசிவன்(66) ஊரில் எப்போதும் இருப்பார். இரவு நேரங்களில் அங்குள்ள மடத்தில் தூங்கும் அவர், யாரேனும் அந்நியரின் நடமாட்டத்தை உணர்ந்தால், உடனடியாக தான் வைத்திருக்கும் விசிலை எடுத்து ஊதி எச்சரிக்கை செய்வார்.
இதுகுறித்து பரமசிவன் கூறும்போது, ‘‘என்னை பெத்தவங்க 36 வருஷத்துக்கு முன் இறந்துட்டாங்க. அதுக்கு அப்புறம் என் உடன்பிறந்தவங்க பார்த்துகிட்டாங்க. 20 வருஷத்துக்கு முன்னாடி கிராமத்துல இளைஞரணி தொடங்கினாங்க.
அப்போது முதல் மாதந்தோறும் சீட்டு பணம் வசூலித்து, குலுக்கல் நடத்துவது, ஊர் காளியம்மன் கோயில் வைகாசி திருவிழாவுக்கு தலைக்கட்டு வரி வசூல் செய்வது போன்ற வேலைகளை நான்தான் பார்த்துக்கிறேன். கண் பார்வை இல்லைன்னாலும் இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு இடமும் எனக்கு தெரியும்’’ என்றார்.
சல்லிசெட்டிபட்டியைச் சேர்ந்த சீ.ஏசுராஜ் என்பவர் கூறும்போது, ‘‘தைப்பொங்கல், வைகாசி மாதம் கடைசி செவ்வாயன்று நடக்கும் காளியம்மன் கோயில் திருவிழா, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மட்டும்தான் நாங்கள் அனைவரும் ஊரில் இருப்போம்.
நாங்கள் ஊரில் இல்லாத நாட்களில், ரேஷனில் பொருட்கள் வழங்கினால் அதை ஊருக்கு பொதுவான மைக்கில் பரமசிவன் அறிவிப்பார். எங்கள் கிராமத்தில் சுமார் 30 பேர் முதியோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இதை வழங்க மாதந்தோறும் வங்கி ஊழியர் வந்தவுடன், அதுகுறித்து மைக்கில் தெரிவிப்பார். தண்ணீர் திறந்து விடுவதும் அவர்தான்.
இளைஞரணி கணக்குகளை சரியாக வைத்திருப்பார். ரூபாய் நோட்டுகளை தொட்டுப் பார்த்தே அதன் மதிப்பை கூறிவிடுவார். இரவு நேரத்தில் வெளியாட்கள் யாராவது ஊருக்குள் நுழைந்தால் உடனடியாக விசில் ஊதி எச்சரிக்கை செய்துவிடுவார்.
தனி ஆளாக ஊரையே அவர் நிர்வகிக்கிறார்” என்றார். தான் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து, இக்கிராமத்தில் உள்ள பொன்அம்மன் கோயிலுக்கு ஆழ்துளைக் கிணறு அமைத்து, மோட்டார் பொருத்தி கொடுத்துள்ளார் பரமசிவன். என்று கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்