தமிழகம்

கேரள மாற்றுத்திறனாளி ஓவியர் ரஜினியுடன் சந்திப்பு: ரஜினியின் ஓவியத்தைப் பரிசாக அளித்தார்

செய்திப்பிரிவு

கேரள மாற்றுத்திறனாளி ஓவியர், நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார். அவருடன் ரஜினி புகைப்படம் எடுத்துக்கொண்டார். தான் காலால் வரைந்த ரஜினியின் ஓவியத்தை அப்போது பரிசளித்தார்.

கேரள மாநிலம் ஆலத்தூரைச் சேர்ந்த இளைஞர் பிரனவ். இரண்டு கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி இளைஞர். ஓவியரான இவர் கேரளாவுக்கு மகா புயல் நிவாரண நிதி அளித்தார். அதைப் பாராட்டி கேரள முதல்வர் நேரில் அழைத்து பிரனவிடம் இருந்து நிவாரண நிதியைப் பெற்றுக்கொண்டார்.

அவரது காலை பிடித்துக் குலுக்கி நன்றி தெரிவித்தார். அவருடன் பினராயி விஜயன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். காலால் செல்போனில் செல்ஃபி எடுக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் தனியார் இதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரனவ், நடிகர் ரஜினிகாந்தைச் சந்திக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை எனத் தெரிவித்திருந்தார். இதுகுறித்துக் கேள்விப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளி ஓவியரான இளைஞர் பிரனவை இன்று தனது இல்லத்துக்கு அழைத்தார். அவரை வரவேற்றுப் பாராட்டினார்.

பிரனவ் தன் காலால் வரைந்த ரஜினியின் ஓவியத்தை அவருக்குப் பரிசளித்தார். பின்னர் தனது விருப்பப்படி ரஜினியுடன் பிரனவ் செல்ஃபி எடுத்துக்கொண்டார். தனது ஆசையை நிறைவேற்றிய ரஜினிக்கு நன்றி தெரிவித்து பிரனவ் கிளம்பிச் சென்றார்.

SCROLL FOR NEXT