தமிழகம்

எம்ஜிஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரு தலைவர்: ஸ்டாலினை புகழ்ந்த பாஜக நிர்வாகி

செய்திப்பிரிவு

அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் எனவும், எம்ஜிஆருக்கு பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் அவர் தான் எனவும் திருமண விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற திமுக எம்எல்ஏ பெரியண்ணன் அரசு இல்லத் திருமண விழாவில் பாஜக மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் பேசியது:

புதுக்கோட்டையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எப்படி பார்த்தேனோ, அதே கட்டுடல் குறையாமலும், அழகு குறையாமலும் அப்படியே இப்போதும் இருக்கிறார். இதை அரசியலுக்காக சொல்லவில்லை. ஆண்டவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். எம்ஜிஆருக்குப் பிறகு நான் ரசித்த ஒரு தலைவர் ஸ்டாலின்தான்.

ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்று மக்கள் கூறிக்கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் இருக்கையை தட்டிப்பறிக்க வேண்டும் என்று அவர் நினைத்திருந்தால் ஒரு இரவுக்குள் கூவத்தூருக்குச் சென்று பிடித்திருப்பார். ஆனால், ஆட்சி அதிகாரம் என்பது ஜனநாயகத்தின் மூலம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் காத்திருக்கிறார்.

சிறைக்கு சென்றிருப்பேன்

‘பொறுமை காப்பவர் பூமி ஆள்வார்’ என்பதைப்போல நிரந்தரமாக ஆளவே இங்கு காத்திருக்கிறார். 2011 அக்.31-ல் கருணாநிதி இல்லையென்றால் நான் கொலைக் குற்றவாளியாகி சிறைக்கு சென்றிருப்பேன். சட்டப்பேரவை தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என பல தேர்தல்களில் திமுக வேட்பாளர்களுக்காக வரிந்துகட்டி வேலை பார்த்துள்ளேன்.

நான் திமுகவுக்கு எந்த அளவுக்கு நன்றிக் கடன் பட்டவன் என்று இதைவிட விரிவாகச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சொன்னதைப்போல, காலம் கனியும், காரியங்கள் நடக்கும். அதேபோல, மு.க.ஸ்டாலின் அரியணை ஏறுவார். அதையெல்லாம் நாங்கள் பார்த்து அகமகிழ்ச்சி கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

திமுகவில் இருந்தவர்

பி.டி.அரசகுமார், ஏற்கெனவே திமுக, அதிமுக கட்சிகளில் இருந்தவர். பின்னர், திராவிட விழிப்புணர்ச்சிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர், அந்த கழகத்தை அகில இந்திய தேசிய பார்வர்டு பிளாக் என்ற கட்சியாக மாற்றினார். அதன்பின், பாஜகவில் இணைந்து மாநிலத் துணைத் தலைவராக உள்ளார்.

SCROLL FOR NEXT