தமிழகம்

நீர் மேலாண்மையில் காஷ்மீருடன் இணைந்து செயல்படுவோம்: தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

செய்திப்பிரிவு

நீர் மற்றும் பேரிடர் மேலாண்மையில் ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களோடு தமிழகம் இணைந்து செயல்படும் என்று தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 'ஒரே இந்தியா, சிறப்பான இந்தியா' திட்டத்தின் கீழ் ஜம்முவில் நேற்று நடைபெற்ற நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்த கருத்தரங்கில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:

தமிழகமும் ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களும் இணைந்து நீர், பேரிடர் மேலாண்மை தொடர்பான கருத்துகளை பகிர்ந்து கொள்வதற்காக இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. வீடு, விவசாய பயன்பாட்டுக்கு குறைந்த அளவு நீரைப்பயன்படுத்துதல், பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இருவரும் இணைந்து செயல்பட முடியும்.

தமிழகம் நாட்டின் தெற்கு முனையிலும், ஜம்மு - காஷ்மீர், லடாக் வடக்கு முனையிலும் உள்ளன. நிலம், நீர், காற்று, வானம் என்று சுற்றுச்சூழல் வெவ்வேறாக உள்ளன. பல்வேறு நிலைகளில் பேரிடர்களை சந்திக்கும் நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் 58.6 சதவீத நிலப்பகுதி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ளது. 7,516 கி.மீ. நீள கடற்கரையில் 5,700 கி.மீ. நீள கடற்கரைப் பகுதி சூறாவளி, சுனாமியால் பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் உள்ளது. 68 சதவீத விவசாய நிலப்பகுதி வறட்சியை சந்திக்கிறது. மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் பனிப்பாறை சரிவும் ஏற்படுகின்றன.

1,076 கி.மீ. கடற்கரைப் பகுதியைக் கொண்ட தமிழகமும் பேரிடர்களால் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல், மழை பாதிப்புகளின்போது தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் பாராட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு பேரிடரும் நமக்கு புதிய பாடத்தை கற்பிக்கின்றன.

நீர் மேலாண்மையிலும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. குடிமராமத்து, குளங்கள் தூர்வாருதல், குடிநீருக்கான கூடுதல் ஆதாரங்களை உருவாக்குதல், மழைநீர் சேகரிப்பு, நீர் மறுசுழற்சி என்று பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது. நீர், பேரிடர் மேலாண்மையில் ஜம்மு - காஷ்மீர்,
லடாக் யூனியன் பிரதேசங்களுடன் தமிழக அரசு இணைந்து செயல்படும். ஜம்மு வல்லுநர்களை தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன். இவ்வாறு அமைச்சர் உதயகுமார் பேசினார்.

வேளாண்மைத் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இக்கருத் தரங்கில் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT