தமிழக அரசு பொங்கலுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாகக் கொடுக்க இருப்பதைச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், வாட்ஸ் அப் கதை மூலம் அதை விமர்சித்துப் பேசினார்.
புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் ஸ்டாலின் பேசியதாவது:
''எப்பொழுதுமே தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு ஜனவரி முதல் தேதியில்தான் ஆரம்பிக்கும். ஆனால் உள்ளாட்சித் தேர்தல் வருவதால் இப்பொழுதே அதை ஆரம்பித்து விட்டார்கள். அதை நான் தவறு என்று சொல்லவில்லை. மக்களுக்கு பயன் இருக்கிறது என்றால் அதை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்கிறோம். சர்க்கரை அட்டை வைத்திருப்பவர்கள் 10,19,493 பேர். அந்த அட்டைதாரர்கள் மாற்றப்படுகிறார்கள். மாற்றுவதற்கான கால அவகாசம் முடிந்து விட்டது. பொங்கல் பரிசு அனைவருக்கும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அதில் ஏன் இந்த பாரபட்சம்?
தலைவர் கலைஞர் இலவச தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்தார். ரேஷன் கார்டு இருந்தாலே அனைவருக்கும் இலவச தொலைக்காட்சிப் பெட்டி வழங்கிய ஆட்சி கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி.
இரண்டு நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப்பில் ஒரு வேடிக்கையான துணுக்கு படித்தேன். மனதைக் கவர்ந்த திருடன் என்று ஒரு செய்தி. ஒரு திருடன் தன் தொழிலிலும் தர்மத்தைக் கடைப்பிடிப்பான். ஒருநாள் ஒரு வீட்டுக்குப் போய் அண்டாவில் இருந்து அடுப்பு வரை திருடி விட்டான். எல்லாவற்றையும் மூட்டை கட்டி எடுத்துக் கொண்டு போகும் பொழுது, வீட்டுக்காரர் வந்தால் அதிர்ச்சி அடைவார் என்று யோசித்தான். இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை எடுத்து ஒரு கவரில் வைத்து, ‘நான் எல்லாவற்றையும் திருடிக்கொண்டு போகிறேன். இரண்டுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக்கொள்ளுங்கள்’என்று எழுதி வைத்துவிட்டுப் போனான். வீட்டுக்காரர் வந்தார். எல்லா பொருட்களும் களவு போய்விட்டன. அழுதார். புலம்பினார். அப்போது அந்த கவரை பார்த்தார். கொஞ்சம் சந்தோசம். எல்லா வீட்டிலும் திருடி விட்டு இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறான் அந்தத் திருடன். அந்த ஆயிரம் ரூபாய் எதற்கு என்று கேட்காதீர்கள். பொங்கலுக்கு கொடுக்கப்படும் ஆயிரம் ரூபாயை எதற்கென்று கேட்காதீர்கள். இதுதான் இன்றைய நிலைமை''.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.