தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள், டெல்டா மாவட்டங்கள், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளிலும் நேற்று விடிய, விடிய மழை பெய்தது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்
அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர் பகுதியில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை முழுவதும் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. போக்குவரத்து பாதிப்பு, மின்சாரம் துண்டிப்பு ஆகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டால் உதவிக்கு அழைக்க சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது. மழை பாதிப்பு குறித்து 044-25384520, 044-25384530, 044-25384540 என்ற எண்களிலும், 9445477205 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
இந்நிலையில் நாளை (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில், தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் இதில் கலந்துகொள்கின்றனர்.
சாலைகளில் ஏற்படும் பழுதுகளைச் சரிபார்ப்பது, மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படாமல் பாதுகாப்பது, தற்காலிக மருத்துவ முகாம்களை அமைப்பது, தடையில்லா மின்சாரம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், மீட்புப் பணிகள், நிவாரண முகாம்கள், தாழ்வான பகுதிகள், புயல் உருவானால் எதிர்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.