பஞ்சாப்பில் நடந்த ஆம்புலன்ஸ் விபத்தில் ராயக்கோட்டையைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள முத்தம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சரவணபாண்டியன் (31). இவருடைய மனைவி ஷோபா. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆகிறது. தற்போது ஷோபா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
சரவணபாண்டியன் பஞ்சாப் மாநிலம் அபுர் பகுதியில் ராணுவத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 27-ம் தேதி இரவு சிகிச்சைக்காக வந்த நபர் ஒருவரை, மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு சரவண பாண்டியன் உட்பட 5 பேர் ஆம்புலன்ஸில் சென்றனர். அப்போது திடீரென ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சரவணபாண்டியன் உட்பட 5 பேரும் நிகழ்விடத்தி லேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து சரவணபாண்டியனின் உடல் விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ அதிகாரி மனோ தலைமையில் ராயக்கோட்டைக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் முத்தம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.