திருச்சியில் நேற்று நடத்திய சோதனைக்குப் பின் சர்புதீன், அப்துல் ஜப்பார் ஆகிய இருவரையும் விசாரணைக்காக அளுந்தூருக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ அதிகாரிகள். 
தமிழகம்

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு?- திருச்சி, தஞ்சையில் 3 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை: இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் உட்பட 3 பேரிடம் விசாரணை

செய்திப்பிரிவு

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாகக் கருதி திருச்சி, தஞ்சையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் நேற்று சோதனை நடத்தினர். இன்று வெளிநாடு செல்ல இருந்தவர் உள்ளிட்ட 3 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் சீனிவாச நகர் விரிவாக்கப் பகுதி யிலுள்ள நேதாஜி நகரைச் சேர்ந்த ஷேக் தாவூத் மகன் சர்புதீன்(21). டிப்ளமோ படித்துள்ள இவர், மணிகண்டம் அருகே அளுந்தூர் பிரிவு சாலையில் ஜெராக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வந்தார்.

இவர், தடை செய்யப்பட்ட தீவிர வாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருப்ப தாக எழுந்த சந்தேகத்தின் அடிப் படையில் கேரளாவிலுள்ள தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) அதிகாரிகள் குழுவினர் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருச்சிக்கு வந்து, சர்புதீன் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது சர்புதீனின் செல் போன், லேப்டாப் ஆகியவற்றை ஆய்வு செய்ததுடன், சமூக வலை தளங்களில் பதிவிடப்பட்டுள்ள அவரது உரையாடல்களையும் ஆய்வு செய்தனர். சர்புதீன் மட்டு மின்றி அவரது மைத்துனரான அதே பகுதியில் நத்தார் தெருவில் வசிக் கும் அப்துல் சமது மகன் அப்துல் ஜப்பார் (24) மீதும் என்ஐஏ அதி காரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

எனவே, அவரையும் அழைத்து வந்து விசாரித்தபோது, அப்துல் ஜப்பார் இன்று (டிச.1) குவைத் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிய வந்தது. இதையடுத்து அவரது பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட வற்றை என்ஐஏ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து சர்புதீன், அப்துல் ஜப்பார் ஆகியோரிடம் என்ஐஏ அதிகாரிகள் நீண்ட நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தி னர். பின்னர் இருவரையும் அளுந் தூரிலுள்ள கம்ப்யூட்டர் சென்ட ருக்கு அழைத்துச் சென்று, அங்கும் சோதனை மேற்கொண்டனர். அதில் கிடைத்த ஆவணங்கள், தகவல்களின் அடிப்படையில் நேற்று மாலை 5 மணி வரை இருவரிடமும் விசாரணை நடத்தப் பட்டது.

பின்னர் கேரள மாநிலம் கொச்சி யிலுள்ள என்ஐஏ மண்டல தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு இன்று ஆஜராகும்படி கூறிவிட்டு சர்புதீன், முகமது ஜப்பார் ஆகிய இருவரையும் விடுவித்தனர். இவர்களிடமிருந்து 2 லேப்டாப், 5 செல்போன், கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க், வங்கி கணக்குப் புத்த கம் உள்ளிட்டவை பறிமுதல் செய் யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, தஞ்சாவூர் ஆட்டு மந்தை தெருவைச் சேர்ந்த காலணி விற்பனையகம் நடத்திவரும் ஷேக் அலாவுதீன்(55) வீட்டில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் பல ஆண்டு களுக்கு முன் சிமி என்கிற அமைப் பில் உறுப்பினராக இருந்துள்ளார்.

இந்நிலையில், இவர் தடை செய் யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் இயக்கத் துக்கு ஆதரவாக தனது முகநூல் பக்கத்தில் கருத்துகளை தெரிவித் திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, கொச்சியில் உள்ள டிஎஸ்பி விஜயகுமார் தலைமையிலான 5 பேர் கொண்ட என்ஐஏ குழுவினர், ஷேக்அலாவுதீன் விட்டுக்கு நேற்று காலை 6.30 மணிக்கு வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, அவரது காலணி விற்பனையகத்திலும் சோதனை நடத்தினர். 2 மணி நேர சோதனைக்கு பிறகு அவரிடம் இருந்த ஒரு லேப்டாப், செல்போன், டைரி ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து, ஷேக் அலாவுதீனை கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ அதிகாரிகள், நேற்று மாலை வரை அவரிடம் விசாரணை நடத்தினர்.

ஐஎஸ் அமைப்பை தொடர்புகொள்ள முயற்சி

திருச்சியில் நடத்தப்பட்ட சோதனை குறித்து காவல்துறையினர் கூறியபோது, ‘‘சர்புதீன், அப்துல் ஜப்பார் ஆகிய இருவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அந்த அமைப்பை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்படும் பதிவுகள், வீடியோக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பின்னூட்டமிட்டு வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தற்போது இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. முகமது ஜப்பார் வெளிநாடு செல்வதும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடனான தொடர்பு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

SCROLL FOR NEXT