தமிழகம்

தகவல் ஆணையர்கள் நியமனம் முறையாக நடைபெறவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் தகவல் ஆணையர்கள் நியமனம் முறையாக நடைபெறவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக முன்னாள் டிஜிபியும், தமிழக அரசின் ஆலோசகராக உள்ள கே.ராமானுஜம் மற்றும் தகவல் ஆணையர்களாக மேலும் இருவர் பதவியேற்றுள்ளனர்.

தகவல் துறையின் முதன்மை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள ராமானுஜம், பணி ஓய்வு பெறுவதற்கு ஒருநாள் முன்னதாக டிஜிபி ஆக பணி நியமனம் செய்யப்பட்டு, 2 ஆண்டுகள் பணியாற்றி, பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அதிமுக ஆட்சியிலேயே ஆலோசகராக பணியாற்றியவர்.

கடந்த காலத்தில் உளவுத் துறையில் பணியாற்றி, ரகசியங்களை எல்லாம் காப்பாற்றும் பொறுப்பில் இருந்தவர் அவர். தற்போது நியமிக்கப்பட்ட பதவி, அரசின் உண்மையான தகவல்களை கேட்பவர்களுக்கு எவ்வித ஒளிவு மறைவுமின்றி அவற்றை சேகரித்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பாகும்.

ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிரான வருமான வரி வழக்கை விசாரித்தவர் நீதிபதி தட்சிணாமூர்த்தி. அவர் தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள மற்றொருவர் அதிமுகவின் ஒரு பிரிவில் பொறுப்பில் உள்ளவர் என்றும், கடந்த 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்றும் ஒரு ஆங்கில நாளேடு எழுதியுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையரை நியமிப்பதற்கான கூட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தேமுதிக தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளனர். அதில் தகவல் ஆணையத்தில் உள்ள காலியிடங்களைக் குறிப்பிட்டு, கட்சியின் கருத்தை மட்டுமே கேட்டுள்ளனர். அந்தக் கடிதமும் கூட்டம் நடைபெற்ற நாளன்றுதான் கிடைத்துள்ளது. அதனால் அக்கடிதத்துக்கு அவரால் பதில் அளிக்க முடியவில்லை என்று அந்தக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT