தமிழகம்

மூணாறில் செல்ஃபி எடுத்த சுற்றுலா பயணிகளைத் துரத்திய காட்டு யானை: எச்சரிக்கும் வனத்துறை

என்.கணேஷ்ராஜ்

மூணாறு ராஜமலை பகுதியில் காட்டு யானை முன்பு செல்பி மற்றும் வீடியோ எடுத்த சுற்றுலாப் பயணிகளின் கூச்சலால் கோபமடைந்த யானை அவர்களை துரத்தத் தொடங்கியது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் அதிகளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளன. மேலும் மாட்டுப்பட்டி அணை, குண்டலாறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா பகுதிகளும் உள்ளன. மூணாறு பகுதியில் ஆண்டு முழுவதும் நிலவும் சில்லென்ற பருவநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

இதனால் சுற்றுலா சார்ந்த தொழில்கள் இங்கு அதிகம் உள்ளன.

மூணாறைச் சுற்றி பல பகுதிகளிலும் வனத்தை ஒட்டிய பகுதிகளிலே சாலைகள் அமைந்துள்ளன. இதனால் யானை உள்ளிட்ட பல்வேறு வன விலங்கினங்கள் சாலையை கடந்து செல்வது சர்வசாதாரணமாக உள்ளது. சில நேரங்களில் சாலைகளில் வெகுநேரம் நின்று பின்பு காட்டிற்குள் செல்லும்.

சுற்றுலாப் பயணிகள் இதுபோன்ற நேரங்களில் அதன் முன்பு நின்று செல்பி எடுத்தல், சத்தம் போடுதல், வாகன ஒலிப்பான்களை அடித்தல் என்று செயல்படுகின்றனர். சந்தோஷ மனோநிலையில் இதுபோன்று செய்வது பல நேரங்களில் ஆபத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

குறிப்பாக ராஜமலை, வட்டவடா, சாந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் இது போன்ற நிகழ்வு அடிக்கடி ஏற்படுகிறது.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், யானைகள் கூட்டமாக மட்டுமல்லாது தனியாகவும் இப்பகுதிகளில் வருகின்றன. இதைப் பார்த்த சுற்றுலாப் பயணிகள் உற்சாக மனோநிலையில் யானைக்கு கோபம் ஏற்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இது ஆபத்தை விளைவிக்கும். யானை தூரத்தில் இருப்பது போல தெரிந்தாலும் விரட்டத் துவங்கினால் ஓடித் தப்பிப்பது சிரமம். எனவே இது போன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும்.

வாகனம் செல்லும்போது யானை குறுக்கிட்டால் இன்ஜினை ஆப் செய்யாமல் நிறுத்தினாலேயே யானை தன்னாலே கடந்து சென்றுவிடும். முகப்பு விளக்கை எரியவிடுதல், ஹார்ன் அடித்தல் போன்ற செயல்களைச் செய்யக் கூடாது என்றனர்.

SCROLL FOR NEXT