விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிறப்பு மிக்க பிளவக்கல் அணையில் பராமரிப்பின்றிக் கிடக்கும் பூங்கா சீரமைக்கப்பட்டு சிறந்த சுற்றலா தலமாக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்திற்கு அரணாக அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சிமலையில் இயற்கை வளங்கள் நிறைந்த எழில் கொஞ்சும் பகுதிகளில் ஒன்று விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் அணை. மேற்குத் தொடர்ச்சிமலைகளில் பெய்யும் மழைநீர் வழிந்து காட்டாறுகளாக உருவெடுத்து ஓடிவந்து பிளவக்கல் அணையில் தேங்குகின்றன.
பேச்சிகேணி, உலக்கவந்தான்ஓடை வழியாகவும் மோத்திரப்பாறை வழியாக வரும் மழைநீரும் காட்டாறும் கலந்து பிளவுக்கல் அணையை நிரப்புகின்றன. முல்லைப் பெரியாறு அணை இதன் வெகு அருகில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிறப்புமிக்க இந்த அணை காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. 188 ஏக்கர் பரப்பளவு கொண்டது. சுற்றிலும் எழில் சூழ்ந்த மலைகளாலும் மலைகளின் கிரீடங்கள்போல் மேகக் கூட்டங்களாலும் பிளவக்கல் அணை இற்கை எழிலோடு காணப்படுகிறது.
இதன் மொத்த கொள்ளளவு உயரம் 48.50 அடி. மேற்குத் தொடர்ச்சிமலையில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் தற்போது 44.95 அடியாக உயர்ந்து கடல்போல் காட்சியளிக்கிறது. பிளவக்கல் அணையிலிருந்து செல்லும் 4,200 மீட்டர் நீளமுள்ள பிரதான காய்வாய் மூலம் 40 கண்மாய்களும் 8,531 ஏக்கர் விலை நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன.
தற்போது, அணையின் நீர்மட்டம் உயர்ந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் அணையைக் காண சுற்றியுள்ள கிராம மக்களும், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் பிளவக்கல் அணைக்கு தினந்தோறும் வந்துசெல்கின்றனர்.
ஆனால், ஓய்வெடுப்பதற்காகவும், சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காகவும் அமைக்கப்பட்ட அணையை ஒட்டி இயற்கை அழகுடன் அமைக்கப்பட்ட பூங்கா தற்போது பராமரிப்பின்றி கிடப்பது பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.
இப்பூங்காவில் கடந்த 30.4.2002ல் ரூ.20 லட்சத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித்துறையின் சார்பில் பிளவக்கல் அணை அழகுபடுத்தும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்காக ரயில் என்ஜின் மாதிரியும் அங்கு வைக்கப்பட்டது.
தற்போது அவை பராமரிப்பின்றி கிடப்பதோடு, 12.6.2002ல் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு அப்போதைய சிவகாசி தொகுதி எம்.பி. வைகோவால் திறந்துவைக்கப்பட்ட பார்வையாளர் கோபுரமும் சேதமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
மேலும், பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த செயற்கை நீருற்றுக்கள், வன விலங்குகளின் சிலைகள், சிறுவர் விளையாட்டு சாதனங்களும் பராமரிப்பின்றி பழுதடைந்து கிடக்கின்றன. மரங்கள் பல வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. பூங்காவில் போடப்பட்ட தார் சாலைகள் சேதமடைந்துள்ளன.
பூங்காவில் திறக்கப்பட்ட மீன் காட்சியகமும் பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு கிடப்பது சுற்றாலா பயணிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அதுமட்டுமின்றி, ஆண்கள், பெண்களுக்கென கட்டப்பட்ட நவீன கழிவறைகளும் பூட்டிக் கிடப்பதால் சுற்றுலாப் பயணிகள் பூங்காவுக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து, சுற்றுலாப் பயணிகள் சிலர் கூறுகையில், சிறப்பு மிக்க பிளவக்கல் அணையிலுள்ள பூங்காவை பொதுப்பணித்துறையும் சுற்றுலாத்துறையும் இணைந்து சீரமைத்து சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தினால் பிளவக்கல் அணை சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
பூங்காவில் அடர்ந்த மரங்கள் உள்ள பகுதிகள் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த போலீசார் ரோந்துவந்தால் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்றனர்.