யானைகள் முகாம் நடைபெறும் பகுதியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.  
தமிழகம்

யானைகள் குதூகலிக்க தயாராகிறது களம் 

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கோயில் யானைகளுக்கான நலவாழ்வு புத்துணர்வு முகாம் தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் அறநிலையத் துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு சார்பில் ஒவ்வோர் ஆண்டும் கோயில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம், மேட்டுப்பாளையம் அருகே பவானியாற்றுக் கரையோரப் பகுதியான தேக்கம்பட்டியில் நடத்தப்பட்டு வருகிறது.

கடந்தாண்டு இங்கு நடைபெற்ற 48 நாள் நலவாழ்வு முகாமில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மற்றும் மடங்களில் வளர்க்கப்பட்டு வரும் 33 யானைகள் பங்கேற்றன. கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ச்சியாக மேட்டுப்பாளையத்தில் யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஏழாம் ஆண்டாக தற்போது இங்கு யானைகள் நலவாழ்வு முகாம் நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதையடுத்து, வழக்கமாக முகாம் நடைபெறும் பவானியாற்றின் கரையோரப் பகுதி சீரமைக்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு 30-க்கும் மேற்பட்ட யானைகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால், இவற்றைக் கட்டி வைக்கப்படும் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. முகாமின் போது யானைகள் காலை, மாலை என இரு நேரங்களில் நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்படும் என்பதால், இதற்கான பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வருகின்றன.

இங்கு யானைகள் தினமும் ஷவர் பாத் மூலம் குளிக்க வைக்கப்படும். இதையடுத்து, குளிக்கும் தரைதளம் மற்றும் ஷவர்கள் அமைக்கும் பணியும்தொடங்க உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் இவ்வாண்டு கூடுதலாக யானைகள் குளிக்கும் இடங்கள் அமைக்கப்படுகின்றன.

முகாமில் பங்கேற்கும் யானைகள் மற்றும் அதன் பாகன்களுக்கான உணவு தயாரிப்பு மற்றும் தங்குமிடங்கள், மின் விளக்குகள், முகாமைச் சுற்றி பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோரும் பணி முடிவடைந்துள்ளது என அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.யானைகள் முகாம் நடைபெறும் பகுதியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

SCROLL FOR NEXT