ஓசூர் வழியாக வெளி மாநிலத்துக்கு லாரி மூலம் கடத்த முயன்ற 1.50 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப் பட்டணம், போச்சம் பள்ளி, ஓசூர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்துமீன்கள் வளர்த்து, வெளி மாநிலங்களுக்கு விற் பனைக்கு அனுப்பி வருகின்றனர். பண்ணைக் குட்டைகள் வைத்துள்ள சிலர், மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் மீன் வகையான, தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை ரகசியமாக வளர்த்து வருகின்றனர்.
குறிப்பாக, ஓசூர் பகுதியில் வளர்க்கப் படும் இவ்வகை மீன்களை, இரவில் பிடித்து லாரிகள் மூலம், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். இந்நிலையில், ஓசூர் அருகே உள்ள தொடுதேப்பள்ளி கிராமப் பகுதியில் இருந்து ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் விற்பனைக்காக வெளிமாநிலங் களுக்கு லாரி மூலம் கடத்திச் செல்லப்படு வதாக வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் வருவாய்த்துறையினர் வாகனத் தணிக்கை மேற் கொண்டனர்.
அப்போது, பத்தலப்பள்ளி வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் சென்ற லாரியை நிறுத்தி சோதனை செய்த அலுவலர்கள், அதில் 1.50 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். மீன்களை பறிமுதல் செய்த வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட மீன்வளத்துறை சார் ஆய்வாளர்(பொ) முருகேசனிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து மீன்வளத்துறை அலுவலர்கள், பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் குழி தோண்டி மீன்களை கொட்டி அழித்தனர்.
‘கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளோர், அரசால் தடை செய்யப்பட்ட ஆப்பிரிக்கன்கெளுத்தி மீன்களை வளர்க்க வேண்டாம். ஏற்கெனவே பண்ணைகளில் வளர்த்து வரும் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அழிக்க வேண்டும். மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என மீன்வளத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.