அஞ்செட்டி சாலையை கடந்த யானைக் கூட்டம், தேன்கனிக் கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது.
கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து கடந்த மாதம் வெளியேறிய 150-க்கும் மேற்பட்ட யானைகள், தமிழக எல்லையான ஜவளகிரி வனச்சரக பகுதிக்கு இடம் பெயர்ந்தன. இந்த கூட்டத்திலிருந்து பிரிந்த 30-க்கும் மேற்பட்ட யானைகள், தேன்கனிக்கோட்டை வனத்துக்கு வந்தன. இங்கிருந்த யானைகள் ஓசூர் வனச்சரகத்திற்கு இடம் பெயராமல் தடுக்க வனத்துறையினர் போராடி வரும் நிலையில், நேற்று ஜவளகிரி வனப்பகுதியிலிருந்து 70-க்கும் மேற்பட்ட யானைகள் தனியாக பிரிந்து, நொகனூர் காப்புக்காட்டுக்கு வந்தன.
இவை நேற்று மாலை 6 மணிக்கு வனப்பகுதியை விட்டு வெளியேறி, மரகட்டா அருகே அஞ்செட்டி சாலையைக் கடந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்குச் சென்றன. இதனால் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள யானைகளின் எண்ணிக்கை 100-ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக அஞ்செட்டி சாலையை யானைகள் கடந்ததால், சாலையின் இருபுறமும் வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மேலும், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் உள்ள 100 யானைகள், ஓரிரு நாட்களில் ஓசூர் வனச்சரகப் பகுதிக்கு இடம் பெயரும் வாய்ப்பு உள்ளதால், வனத்தையொட்டி ராகி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.