உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் முன்ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி, சென்னையில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என்று கோரி தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழக காங்கிரஸ் கமிட்டி அறக்கட்டளை அலுவலகத்தில் தொலைபேசி உதவியாளராகப் பணியாற்றிய வளர்மதி அளித்த புகாரின் பேரில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் அறக்கட்டளை மேலாளர் நாராயணன் ஆகியோர் மீது தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுக்களை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், இருவரும் மதுரை யில் 15 நாட்கள் தங்கியிருந்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் தினமும் காலை 10.30 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கினார். அதன்படி, மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், நாராயணனும் நேற்று கையெழுத்திட சென்றனர். அப்போது, இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் நீதிபதி வைத்தியநாதன் முன்பு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் நேற்று ஆஜராகி, ‘‘மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் இளங்கோவன் உள்ளிட்ட இருவர் கையெழுத்திட சென்றபோது, காவல் நிலையம் அருகே 500 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து இளங்கோவனுக்கு எதிராக கோஷமிட்டு, கற்களை வீசினர். இளங்கோவனுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை. மதுரையில் இளங்கோவன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும், விசாரணை அதிகாரி சென்னையில் இருப்பதாலும் இவர்கள் மீதான நிபந்தனையை மாற்றி உத்தரவிட வேண்டும்’’ என்று முறையிட்டார்.
அப்போது அரசு வழக்கறிஞர் சண்முகவேலாயுதம் ஆஜராகி, ‘‘மதுரை தல்லாகுளம் காவல் நிலையம் அருகே எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை. இளங்கோவன்தான் அவரது ஆதரவாளர்களுடன் 11 கார்களில் வந்து, காவல் நிலையத்துக்குள் சென்றிருக்கிறார்’’ என்றார்.
நீதிபதி வைத்தியநாதன் குறுக்கிட்டு, ‘‘நீதிமன்ற உத்தரவுப்படி காவல் நிலையத்தில் கையெழுத்திடச் செல்லும்போது 11 கார்களில் செல்ல வேண்டியதன் அவசியம் என்ன?’’ என்று கேட்டார். காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டிய இருவருடன் மேலும் இருவர் மட்டும் செல்ல வேண்டும். நிபந்தனையை மாற்றுவது குறித்து மனு தாக்கல் செய்யுங்கள். அதை உடனே விசாரித்து உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து இளங்கோவன், நாராயணன் ஆகியோர் சார்பில் நிபந்தனையை மாற்றியமைக்கக் கோரி மனுதாக்கல் செய்யப் பட்டது.
அதில், மதுரையில் இளங்கோவன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையைத் தளர்த்த வேண்டும். இவ்வழக்கின் விசாரணை அதிகாரி சென்னையில் இருப்பதால் சென்னையிலேயே கையெழுத்திட அனுமதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
மற்றொரு வழக்கில் சம்மன்
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு குறித்து விமர்சித்துப் பேசியதாக இளங்கோவன் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஆதிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இளங்கோவன் உள்ளிட்ட 3 பேர் அக்டோபர் 1-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.