டிசம்பர் 2-ம் தேதிவரை தென்கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. பருவமழை தொடக்கத்தில் அதாவது அக்டோபர் மாதஇறுதியிலும், இம்மாத தொடக்கத்திலும் நல்ல மழை பெய்ததது. கடந்த 15 நாட்களாக வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் ஆகியவற்றில் ஒரு சில இடங்களைத் தவிர தவிர பெரும்பாலான இடங்களில் மழை குறைந்திருந்தது. சென்னையில் கிழக்குத்திசை காற்று காரணமாக இரவுநேரத்திலும், அதிகாலை நேரத்திலும் மட்டுமே மழை பெய்தது.
இந்நிலையில் மீண்டும் வடகிழக்குப்மழை தீவிரமடையத் தொடங்கியுள்ளது. தமிழகக் கடற்கரையோரத்தில் உள்ள வளமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் கிழக்குத்திசை காற்றின் காரணமாக கேடிசி எனப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், தமிழகத்தில் தென் மாவட்டங்கள், கடலோர, டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பெய்யஉள்ள மழை குறித்து ஃபேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் என்ற பெயரில் எழுதிவரும் பிரதீப் ஜான் 'இந்து தமிழ்திசை'க்கு(ஆன்-லைன்)அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
தமிழகத்தில் அடுத்த வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும்?
நவம்பர் மாத இறுதியில் நல்ல மழை பெய்யும் என ஏற்கனவே கூறியிருந்தேன். அந்த வகையில் டெல்டா மாவட்டங்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இந்த மழை காற்றழுத்த பகுதியினாலோ அல்லது புயல் காரணமாகவோ, புயல் சின்னத்தால் வரும் மழையே அல்ல. கிழக்குதிசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக நமக்கு மழை கிடைக்கிறது. ஆதலால் வட தமிழகம் முதல் தென் தமிழகம் வரை கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
இந்த மழை எந்தெந்த நேரத்தில் பெய்யும்?
பொதுவாக வடகிழக்குப்பருவமழையில் கிழக்குநோக்கி வீசும் காற்றின் காரணமாக கிடைக்கும் மழை, நள்ளிரவு நேரத்தில் தொடங்கி அதிகாலை வரை பெய்யும். சில நேரங்களில் அதிகாலை நேரத்தில் தொடங்கி காலை நேரம் வரை பெய்யும். ஆனால், பகல்நேரத்தில் வெயில் வந்தவுடன் மழை நின்றுவிடும். அதுபோலத்தான் வரும் நாட்களும் இருக்கும். ஆனால், சில இடங்களில் மட்டும் பகல்நேரத்தில் விட்டுவிட்டு மழை பெய்யக்கூடும்
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது?
தென் தமிழகத்திலும், வடதமிழகத்திலும் உள்ள கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்களுக்கு அதாவது டிசம்பர் 2-ம் தேதிவரை கனமழை முதல் மிககனமழை வரை பெய்ய வாய்புள்ளது. ஒரு காற்றழுத்த பகுதி இருந்திருந்தால், உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருந்திருக்கும் அவ்வாறு இல்லை
டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், திரூவாரூர்,திருச்சி, விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சை,நாகை ஆகிய மாவட்டங்களில் கன மழை முதல் மிககனமழை பெய்யக்கூடும். தென் மாவட்டங்களில் தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழைக்கு வாய்ப்புள்ளது
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் மழை எப்படி இருக்கும்?
கேடிசி எனச் சொல்லப்படும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நவம்பர் 30ம் தேதி(இன்று) டிசம்பர் 1ம்ததேதி(நாளை) இருநாட்கள் முக்கியமானவை. இந்த இரு நாட்களிலும் கேடிசி பகுதிக்கு நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளது
சென்னையின் சராசரி மழை 850மிமீ ஆனால், தற்போதுவரை உத்தேசமாக 400மி.மீ வரைதான் மழை பெய்துள்ளது. ஆதலால், வரும் இருநாட்களில் கனமழை பெய்து எதிர்பார்ப்பை நிறைவு செய்யும்.
சென்னையில் பகல்நேரத்தில் மழை பெய்யுமா?
சென்னையைப் பொறுத்தவரைக்கும் இன்று அதிகாலையே பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்துவிட்டது. மேகக்கூட்டங்கள் தொடர்ந்து நகர்ந்து வருகின்றன. நான் ஏற்கனவே கூறியதைப்போல, இன்றும், நாளையும் முக்கியமானவை. சென்னையில் இன்று பகல் நேரத்தில் ஆங்காங்கே கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எந்த இடங்களில் என்றுகூற இயலாது. ஆனால் பொதுவாக இந்த மழை இரவுநேரத்தில் அல்லது அதிகாலை நேரத்தில் தொடங்கி காலைநேரத்தில் நின்றுவிடும். பகலில் வழக்கம்போல் வெயில் இருக்கும். ஆனால், சென்னையில் இன்று பகலில் பெய்ய வாய்ப்பு உண்டு
டிசம்பர் 2-ம் தேதிக்குபின் மழை நீடிக்குமா?
டிசம்பர் 2ம் தேதிக்கு பின் வறண்ட காற்று வருகிறது. அதாவது உயர்காற்றழுத்தம் இருக்கும்போது ஈரப்பதம் இல்லாத காற்று வடதமிழகத்தக்கு அருகே வருவதால் டிசம்பர் 2-ம் தேதிக்குப்பின் மழை குறைய வாய்ப்புள்ளது. ஆனால்,இந்த வறண்ட காற்று எந்த அளவுக்கு குறைகிறதோ அதாவது புதுச்சேரி, வடதமிழகம் ஆகியவற்றோடு நின்றுவிட்டால் அடுத்து வரும்நாட்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
தென் உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா?
டிசம்பர் 2-ம்தேதிவரை தமிழகத்தின் வடதமிழகம் முதல் தென் தமிழகம்வரை உள்ள கடலோர மாவட்டங்களுக்கே அதிகமான கனமழைக்கு வாய்ப்புள்ளது. மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட தென்உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பில்லை.
ஏனென்றால்,காற்றின் குவிப்பு வடகிழக்கில் இருந்து தென் மேற்கு நோக்கி நகர்கிறது. மேற்குதிசை நோக்கி நகரவில்லை. டிசம்பர் 2-ம் தேதிக்குப்பின் கிழக்குத் திசைக்காற்று வீசும்போது, தென்உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.ஆதலால், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை வாய்ப்புள்ளது. அதிலும் வடதமிழகம் முதல் தென் தமிழகம்வரை உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழைமுதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது
இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவி்த்தார்