நீரிழிவு நோயின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த ஈரோடு சங்கமேஸ்வரர் கோவில் யானை வேதநாயகி உயிரிழந்தது. அதன் உடலுக்கு பக்தர்கள், பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பவானி கூடுதுறை ஈரோடு மாவட்டம், பவானியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் பெண் யானை வேதநாயகி, கடந்த மூன்று ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தது.
நீரிழிவு நோயின் தாக்கத்தால் காலில் ரணம் உண்டாகி மிகவும் கஷ்டப்பட்டு வந்தது வேதநாயகி. தற்போது 30 வயதுக்கு மேல் ஆகும் வேதநாயகி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலில் இருந்து வந்துள்ளது.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் அபிமானத்தைப்பெற்றவள் வேதநாயகி. அப்பகுதி மக்கள் அல்லாமல் கோவிலுக்கு வரும் அனைத்து வெளியூர் பக்தர்களுக்கு வேதநாயகி ஆசீர்வாதம் வழங்கி அன்பைப்பெற்றது. யானைகள் முகாமிற்கு சென்ற யானைகளில் வேதநாயகி முக்கியமாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த யானையாக விளங்கியது.
கடந்த 30 ஆண்டுகளில் பாகனுக்கோ, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கோ ஒரு இடையூறும் செய்ததில்லை. மிகவும் பொறுப்புடன் வயதான தாயின் அரவணைப்புடன் அனைவரிடமும் நடந்து வந்துள்ளது வேதநாயகி.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நீரிழிவு நோய் தாக்க அதனால் அவதிபட்டு வந்த வேளையிலும் தனது நோயின் அவதியை வெளிக்காட்டாமல் பக்தர்களுக்கு ஆசி வழங்குவதும், கோவில் விழாக்களில் கலந்துக்கொள்வதும் வேதநாயகியின் வழக்கம்.
நீரிழிவு நோயின் தாக்கம் கடந்த மூன்றாண்டுகளாக அதிகமாகி காலில் ரணம் ஏற்பட்டு நிற்கமுடியாமல் கீழே படுத்திருக்கும் நிலைக்கு ஆளானது.தொடர்ந்து சிகிச்சை அளித்தும் காலில் உள்ள புண் ஆறாமல் இருந்ததால், வனத்துறை மற்றும் மருத்துவர் குழு யானைக்கு தொடர்ந்து கவனித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
பெண் யானை வேதநாயகியின் நிலையை அறிந்த சமூக ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கால்கள் காயமடைந்த நிலையில் யானை வேதநாயகியின் கால்களில் மஞ்சள் போட்டு, பிளாஸ்டிக் உறைகளைக் கொண்டு மூடி கட்டப்பட்டு உள்ளதாகவும், யானையை பாகன் முறையாக பராமரிப்பதில்லை எனவும் குற்றம் சாட்டி வாதிட்டார். முறையாக உணவு உட்கொள்ளாததால் யானை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்த வழக்கில் கடந்த வாரம் உயர் நீதிமன்றம், யானைக்கு முறையான சிகிச்சை வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து உடல் நிலை மோசமான நிலையில் சிகிச்சைப் பெற்றுவந்த வேதநாயகி யானை சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கோவிலில் மலர் மாலை போட்டு வைக்கப்பட்டுள்ள கோவில் யானை வேதநாயகி உடலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்குப்பின் வேத நாயகி உடல் நல்லடக்கம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.