ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி, தண்டவாளத்துக்குள் விழப்போன பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப்படை காவலரின் துரித நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோவை-மங்களூரு இடையே இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22610) தினசரி இயக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல காலை 6.40 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டுச் செல்லத் தொடங்கியது.
அந்த ரயிலில் பயணிக்க வந்த ஒரு குடும்பத்தினர், இதைக் கண்டு ஓடும் ரயிலில் ஏறினர். தனது மகனும், கணவரும் ஒருவர் பின் ஒருவராக ஏறிவிட, உடன் வந்த பெண்ணும் ரயிலில் ஏற முயன்றார். கையிலும், தோளிலும் பைகள் இருந்ததால் அவரால் கைப்பிடியை சரியாக பிடித்து ஏற முடியாமல் நிலை தடுமாறி, தண்டவாளத்துக்கும், நடைமேடைக்கும் இடைப்பட்ட பகுதிக்குள் சரிந்து விழப்போனார். அப்போது, நடைமேடை எண் 3-ல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை தலைமை காவலர் பி.பாலகிருஷ்ணன் விரைவாக ஓடிச் சென்று பயணியின் உடலை தாங்கிப்பிடித்து ரயில் பெட்டிக்குள் தள்ளிவிட்டார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு பயணி யின் உயிரை காப்பாற்றிய பி.பாலகிருஷ்ணனை அங்கிருந்த பயணிகள் பாராட்டினர். சம்பவத்தை அறிந்த கோவை ரயில் நிலைய மேலாளர் சதீஸ் சரவணன், காவலர் பி.பாலகிருஷ்ணனை அழைத்து பாராட்டியதோடு அவருக்கு ரொக்கப்பரிசு, பாராட்டுச் சான்றை வழங்கினார்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, “தவறி விழப்போனவரை ரயில்பெட்டிக்குள் காவலர் தள்ளிவிடாமல் இருந்திருந்தால், நடைமேடைக்கும் தண்ட வாளத்துக்கும் இடையே பயணி சிக்கியிருப்பார். எனவே, ஓடும் ரயிலில் ஏறுவதை பயணிகள் தவிர்க்க வேண்டும்” என்றனர்.